dimanche 26 janvier 2014

திக்குத்திசை தெரியாத உலகுக்கு வழிகாட்டும் இந்திய பெண்கள்;

இந்திய பொருளாதாரம் இயற்கையிலேயே பெண் தன்மை கொண்டது என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி ‘‘திக்குத்திசை தெரியாத உலகுக்கு வழிகாட்டும் இந்திய பெண்கள்'' என்ற தலைப்பில் ஆயிரம் பெண் தொழில் வல்லுனர்கள் சந்திப்பு சிறப்பு மாநாடு சென்னை நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பத்மா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சென்னை அடையாறு புற்றுநோய் மைய தலைவர் டாக்டர் வி.சாந்தா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் ஆதித்ய பிர்லா குழும இயக்குனர் ராஜஸ்ரீ பிர்லா, பேராசிரியை பிரேமா பாண்டுரங் மற்றும் அகிலா ஸ்ரீனிவாசன், ஹேமா கோபால், டாக்டர் கமலா செல்வராஜ், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பிரிதா ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி ‘ஆன்மீகமும்-பொருளாதாரமும்' என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஆய்வு நடத்த அறிவுரை
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, நூலகங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் கடந்த 20 ஆண்டுகளாக வகுப்புகள் நடத்தி வந்துள்ளேன். இதன் மூலம் பல்வேறு அனுபவமும் எனக்கு கிடைத்துள்ளது.
குறிப்பாக மேல்நாட்டு பொருளாதாரத்தை பற்றி தான் இந்த கல்வி நிறுவனங்களில் ஆய்வுகள் நடந்துள்ளன.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், பொருளாதாரத்தில் வலிமையான நம் நாட்டு பொருளாதாரம் பற்றி வரும் காலங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கினேன்.
தடை
ஆனால் அங்குள்ள பேராசிரியர்கள், ‘‘கௌரவ பேராசிரியராக வந்தால் பாடத்தை மட்டும் நடத்திவிட்டு செல்லுங்கள்'' என்று என்னுடைய அறிவுரையை தடுத்தனர். இதுபோன்ற அனுபவமும் எனக்கு கிடைத்தது.
பொருளாதார வலிமை
பொருளாதாரத்தை பொறுத்தவரையில் 1715ம் ஆண்டு இந்தியாவில் தனி மனித வருமானம் 24.5 சதவீதமாகவும், சீனாவில் 34 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 2 சதவீதமாகவும் இருந்துள்ளது.
அந்த அளவிற்கு பொருளாதாரத்தில் இந்தியா வலிமை கொண்டிருந்தது. இவ்வளவு இருந்தும் நம் நாட்டு பொருளாதாரம் பற்றி ஆய்வுகள் நடத்தப்படவில்லை.
பெண்ணிய பொருளாதாரம்
ஆசிய நாடுகள் குடும்ப அமைப்பு நாடுகள், ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்புகளில் இருந்து மாறுபட்டு உள்ளது.
சமூகத்தின் அமைப்பை பொருளாதாரம் நிர்ணயிக்கிறது என்று ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் தன்னுடைய ஆய்வில் கண்டறிந்து உள்ளார். நம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது.
காரணம் இங்கு குடும்ப அமைப்புகள் முறையாக இருப்பதுடன், குடும்பத்தை திறம்பட நிர்வகிப்பவர்களும் பெண்களாகவே இருப்பது தான். குழந்தைகள், முதியவர்களை காப்பது, சேமிப்பது, குடும்ப பொருளாதாரத்தை திறமையாக கையாள்வது, சிக்கன தன்மை போன்றவற்றை நம் பெண்கள் திறமையாக கையாள்கின்றனர்.
இதனால் தான் நம் நாட்டு பொருளாதாரத்திற்கும் இயற்கையிலேயே பெண்தன்மை இருக்கிறது. பெண்கள் நிதியை நிர்வகிப்பதால் 2013ம் ஆண்டு 10 லட்சம் கோடி ரூபாய் வரை குடும்பங்களில் சேமிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு ரூ.6 லட்சம் கோடி தான் சேமித்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருப்பதால் அங்கு ஆண் தன்மை கொண்ட பொருளாதாரமாக பொருளாதார நிலை உள்ளது.
இதனால் அமெரிக்காவில் 108 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொதுமக்கள் கடனாளிகளாக மாறி உள்ளனர். ஆன்மீகத்திலும் பெண்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது சிறப்பு தன்மையாகும்.
இதனால் பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளும் பெண்கள் எளிதாக கையாள்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று பேசும் போது கூட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் பெண்களை மையமாக வைத்து தான் வழிபடுகிறோம் என்ற கருத்தையும் வலியுறுத்தினேன்.
இது ஒரு புறமிருக்க அழகு சாதனங்களை அதிகளவில் வாங்குவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் அழகு சாதனங்களை உற்பத்தி செய்து நம்நாட்டு பெண்களிடம் விற்கின்றனர்.
இவற்றை தவிர்த்து பெண்களுக்கு மேலும் சேமிப்பை ஊக்குவிப்பதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் சிறப்படைய வாய்ப்பு என்று கூறியுள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire