samedi 18 janvier 2014

மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் முதலீடு செய்வோம்’ மாநாடு

கிழக்கு மாகாணத்தின் துரித அபிவிருத்திக்கும், மறுமலர்ச்சி க்கும் ‘கிழக்கில் முதலிடுவோம்’ சர்வதேச மாநாடு அடித்தளமாக அமையுமெனத் தான் நம்புவதால் இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள மலேசிய நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான டட்டோ சிறி பேராசிரியரும் கலாநிதியுமான கோபால கிருஷ்ணன் நேற்றுத் தெரிவித்தார். பாம் மரத் தோட்டம் மற்றும் சர்க்கரை துளசி செய்கைகளில் நாம் கிழக்கு மாகாணத்தில் முதலிடத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் அலங்கார மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு ஆகிய கைத்தொழில்களில் முதலிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தவுள்ளோம் எனவும் அவர் கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும்,
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினதும் ஒத்துழைப்பில் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலா அமைச்சின் ஏற்பாட்டிலான ‘கிழக்கில் முதலிடுவோம் சர்வதேச மாநாடு’ இன்று 17ம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறுகின்றது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலா அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்கின்றார். இம்மாநாட்டில் கிழக்கில் முதலிடுவோம் என்ற தொனிப் பொருளில் இணைய தளமொன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. முன்னூறுக்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.
இம்மாநாட்டில் மலேசிய நாட்டின் பி. என். ஜி. ஹோல்டிங்க்ஸ் தனியார் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நிறுவனத்தின் பணிப்பாளர் டட்டோ சிறி, பேராசிரியர் குணபால கிருஷ்ணனும், நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் எஸ். சப்ரினாவும் பங்குபற்றியுள்ளனர்.
இம்மாநாடு தொடர்பாக கலாநிதி கோபால கிருஷ்ணன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ‘இது விஷேட பண்பைக் கொண்டிருக்கும் ஓர் மாநாடு. இந்நாட்டின் ஒரு பிராந்தியத்தை அடையாளப்படுத்தியே இம்மாநாடு நடாத்தப்படுகின்றது. இதன் மூலம் கிழக்கில் முதலிடுவதற்கான வாய்ப்புகளையும், வளங்களையும், வசதிகளையும் எம்மால் இனங்கண்டுகொள்ள முடியும்.
அதேநேரம் இந்நாட்டிற்கு அதிகளவு முதலீடுகள் வந்து சேருவதற்கு இவ்வாறான மாநாடுகள் பெரிதும் உதவும். இம்மாநாட்டின் மூலம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ள துறைகள், அவற்றுக்குரிய ஊக்குவிப்புகள், உள்ளிட்ட பல விடயங்கள் குறித்த தெளிவுகளை எம்மால் பெறலாம் என நம்புகின்றோம். இம்மாநாட்டை நாம் பெரிதும் வரவேற்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire