vendredi 7 novembre 2014

ஒருவர் ஜனாதிபதி 3ஆவது முறை மனுவை வெளிப்படையாக திறந்த நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஆலோசனை கேட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு மீது உச்சநீதிமன்றம் 2 நாட்களில் விசாரணைகளை முடித்தது எப்படி என இலங்கை வழக்கறிஞர்கள் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.
ஜனாதிபதியின் வேண்டுகோளை திறந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாம் மனு கொடுத்தபோது, விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாக அவர் அறிவித்ததாக வழக்கறிஞர்கள் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினரான சுனில் வடகள தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வேண்டுகோள் புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை அரசாங்க விடுமுறையாதலால், அதற்குள்ளாக ஜனாதிபதியின் வேண்டுகோள் மீது எப்படி விசாரணை நடத்தப்பட்டிருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவதாக சுனில் வடகள கூறினார்.
ஜனாதிபதியின் மனுவை வெளிப்படையாக திறந்த நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டுமே ஒழிய அந்தரங்கமான முறையில் விசாரிக்க கூடாது என அவர் தெரிவித்தார்.
தவிர இந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் தமது வாதங்களை முன்வைக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் வடகள தெரிவித்தார்.
இடப்பக்கம் இருப்பவர் உப்புல் ஜெயசூரிய
இடப்பக்கம் இருப்பவர் உப்புல் ஜெயசூரிய
ஜனாதிபதியின் வேண்டுகோள் மீதான விசாரணை முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வந்தாலும், அரசியல் யாப்பின் பிரகாரம் இவ்விவகாரத்தில் மீண்டும் ஒரு விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே இது சம்பந்தமாக பரந்துபட்ட அளவில் கருத்துகளை முன்வைப்பதற்கு சட்டவாதிகளுக்கு இடம் வழங்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்திடம் தான் கோரியுள்ளதாக உப்புல் ஜெயசூரிய தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி சமர்ப்பித்த வேண்டுகோள் தொடர்பாக எழுத்து மூலமாக கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வெள்ளியன்று மாலை 3 மணியோடு முடிவடைந்துவிட்டதாக உச்சநீதிமன்ற பதிவாளர் எம்.எம். ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire