lundi 3 novembre 2014

இலங்கை அரசு மீண்டும் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி .இந்தியா கடும் அதிர்ச்சி

submarrine-200-news.jpgஇலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த இலங்கை அரசு மீண்டும் அனுமதி அளித்திருக்கும் சம்பவம் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் சுமர் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்திய பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியிருந்த நேரத்தில், கொழும்பு துறைமுகத்தில் அந்த நாட்டு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த விவகாரம் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாக் ஜலசந்தி பகுதியில் சமீபகாலமாக நடந்து வரும் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் தொடர்பாக இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சேவிடம் மத்திய அரசு கடும் அதிருப்தியை தெரிவித்தது.
கடந்த வாரம் இந்தியா வந்திருந்த இலங்கை கடற்படை தளபதி ஜெயந்தா பெரேரா, இது குறித்து கூறும்போது, கொழும்பு துறைமுகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில்தான் சீன போர்க்கப்பல்கள் வந்ததாகவும், இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் கூறினார். மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என்று உறுதியளித்த அவர், இலங்கையில் சீன ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும் கூறினார்.
இந்தநிலையில் சீனாவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்றை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அந்த நாடு மீண்டும் அனுமதி அளித்துள்ளது. தாக்குதலில் ஈடுபடக்கூடிய திறன் வாய்ந்த இந்த நீர்மூழ்கி கப்பல், விரைவில் இலங்கையில் உள்ள துறைமுகம் ஒன்றில் நிறுத்தப்படும் என தெரிகிறது.
இலங்கையின் இந்த இரட்டை வேடத்தன்மை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது தொடர்பாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு, இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire