mardi 11 novembre 2014

பொது எதிரணிக்கான சகல ஆதரவினையும் வழங்க நான் தயார்;முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருப்பதற்கும் சுயாதீன சேவைகள் முடக்கப்பட்டிருப்பதற்கும் ஊடக சுதந்திரம் தகவல் அறியும் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் அழிக்கப்பட்டிருப்பதற்கும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையே பிரதான காரணமாகும். தனி மனிதனின் சுயநல ஆட்சியும் சர்வாதிகாரப் போக்குமே இவ் பொது விடயங்களை கட்டுப்படுத்தியுள்ளது.தற்போதைய ஜனாதிபதி தனது அதிகாரங்களை தான் தோன்றித்தனமாக பயன்படுத்துவது நாட்டின் நிலைமையினை மேலும் மோசமடைய வைத்துள்ளதுஎன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவர் மேலும் தெரிவித்திருக்கையில் 17வது திருத்தச் சட்டத்தினை மீண்டும் செயற்படுத்தி அதிகார பரவலாக்கத்தினை மேற்கொண்டு நாட்டின் ஜனநாயகத்தினை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் மனித உரிமைகளையும் சுயாதீன சேவைகளையும் அதிகார பரவலாக்கலையும் மீண்டும் நிலைநாட்ட இந்த பொதுக் கூட்டணி தகுதியானதென நான் நம்புகின்றேன். பொது நிகழ்ச்சி நிரலின் மூலம் சகல கட்சிகளும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தினை மிகச் சரியாக தீர்மானிக்க முடியும்.
ஆகவே, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கி நாட்டின் ஜனநாயகத்தினையும் உரிமைகளையும் வென்றெடுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது எதிரணிக்கான சகல ஆதரவினையும் வழங்க நான் தயாராக உள்ளேன் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி முறைமையினை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் பொது எதிரணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரிகா குமாரதுங்க அவர்கள் பங்குபற்றாமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire