dimanche 14 décembre 2014

30 ஆண்டு கால இலங்கையில் விசாரணை குழுவில் ஜப்பானின் முன்னாள் நீதிபதி நியமனம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு கால போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இலங்கை அரசு நியமித்த குழுவின் காலவரம்பை 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை 7 மாதம் நீட்டித்து அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே கடந்த ஜுலை மாதம் உத்தரவிட்டார். கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக்குழுவுக்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் புகார்கள் ராணுவத்துறையை சேர்ந்தவர்களின் உறவினர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்கள் என தெரியவந்துள்ளது.உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் மேற்கண்ட புகார்கள் தொடர்பாக இந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக் கமிஷனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமாவுடன், இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் சர் டேஸ்மண்ட் டி சில்வா மற்றும் சர் ஜியாஃபரி நைஸ், அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் துறை பேராசிரியர் டேவிட் கிரேன், இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் அவ்தாஷ் கவ்ஷல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் அஹமத் பிலால் சூஃபி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆறாவது உறுப்பினராக ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியான மோட்டூ நோகுச்சி நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், கம்போடியா நாட்டில் உள்ள கூடுதல் சர்வதேச நீதி மன்றத்தில் நீதிபதியாக திறம்பட செயலாற்றியவர்.
சர்வதேச நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கான பொது நிதியத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire