mardi 2 décembre 2014

தலைவர்கள் எல்லாம் தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளார்கள்;பிள்ளையான்

தலைவர்கள் எல்லாம் தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியில்  இது வரலாறு இப்படி இருக்கையில் எப்படி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்த கூட்டுக் கட்சியினர் எமது  பிரச்சினைகளை தீர்க்க உதவுவார்கள் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.பொருளாதார அபிவிருத்தியமைச்சின் வாழ்வின் எழுற்சி நிவாரணம் பெறுபவர்களுக்கு செழிப்பான இல்லம் திட்டத்தின்கீழ்  வீடுகளைத் திருத்துவதற்கான பணக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை (29) இருதயபுரம் திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்1968 இல் டட்லி – தந்தை செல்வா ஒப்பந்தத்தில் அதிகாரம் பிராந்திய முறையிலிருந்து மாவட்ட முறைக்கு வந்தது இறுதியில் எதுவும் இல்லாமல் போய்விட்டது. பின்பு அரசியலில் நரியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா 2/3 பலத்தோடு இருந்தும் தமிழர்களுக்கு இந்திய அரசுடன் செய்து கொண்ட 13 ஆவது ஒப்பந்தத்தின் படி மாகாண சபைக்கான அதிகாரங்களை வடகிழக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை. அதற்காக மஹிந்த ராஜபக்ஸ எமக்கு அள்ளிக் கொட்டிவிட்டார் என்று கூறவில்லை, மாகாணங்களுக்கு அதிகாரங்களை ஓரளவுக்கேனும் வழங்கி இருந்தார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் பெற முடியாது பதிலாக படிப்படியாகத்தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.2009 இன் பின்னர் நாட்டில் அமைதி நிலவுகின்றது இராணுவம், பொலிஸ் பரிசோதனை என்றில்லாமல் யார் எந்த இடத்திற்கும் என்நேரமும் செல்லலாம். இந்நிலையை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழர்களாகிய எமக்கு சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது நாம் படிப்படியாக முன்னேறுவோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுக்களுடன் பேசுதல், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கல் என்று பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றார்கள் அவர்கள் பெரிய தேசியப் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை.மஹிந்த ராஜபக்ஸவின் தீக்க தரிசனமிக்க செயல் அவரது 2015 ஆம் அண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைக் காண்பிக்கின்றது. அதை விடுத்து எல்லாம் கொள்ளை, குடும்ப ஆட்சி என்று ஒட்டு மொத்த பொய்களைக் வாய் கூசாமல் கூறாமல் நல்ல விடயங்களை நல்லது என்றே கூற வேண்டும். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் வந்த பிறகு கிராம புறப் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் வந்தன இதனால் கிராமப் புறமாணவர்கள் 5 ஆம் அண்டு புலமைப்பரிசில் முதல் பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளார்கள்;. மட்டக்களப்பிற்கு நிறைய அபிவிருத்தி வந்துள்ளது. இவைகள் அபிவிருத்தி இல்லையா அதை விடுத்து பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உளரீதியாக ஏற்று சிறந்த சிந்தனை மாற்றத்தோடு செயல்படுங்கள்.சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்து ஆட்சி புரிந்து வந்த  மைத்திரிபால சிறிசேனா பொன்சேகா போல் விழுந்து நொருங்கப் போகின்றார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர் 100 நாட்களில் நிறைவேற்று ஜனதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு நடைமுறைக்கப் பொருந்தாத பொய்யான பிரசாரங்களை பேசி வருகின்றார். இவற்றை நம்பாமல் எமக்குள்ள பிரச்சினைகளை எமது சிறார்களுக்கு இட்டுச் செல்லாது உரிமைகளைப் பெற சிறந்த சிந்தனை மாற்றத்தோடு தீர்க்க தரிசனமிக்க ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்து தமிழர்களாகிய எமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவோம் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire