samedi 20 décembre 2014

எந்த நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ் மக்கள் வாக்களிப்பது?

இந்தக் கட்டுரை எழுதப்படும்வரையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவெதுவும் வெளியாகியிருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் சில அபிப்பிராயங்களின் அடிப்படையில் சில ஊகங்கள் உலவுகின்றன. ஓர் ஊகம் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்கமாக ஆதரவளிக்கக்கூடும் என்றவாறான கருத்து சிலர் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறு கூறுவோர், கூட்டமைப்பில் சம்பந்தனுக்கு நெருக்கமான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் ஆங்காங்கே தெரிவித்திருக்கும் கருத்துக்களை ஆதாரமாக கொள்கின்றனர்.

சமீபத்தில் சுமந்திரன் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் அங்கு இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்புக்களின்போது, மைத்திரிபாலவிற்கு ஆதரவாக பேசியிருப்பதுடன், கூட்டமைப்பின் இலக்கு ஓர் ஆட்சி மாற்றம்தான் என்றவாறும் தெரிவித்திருக்கின்றார். இதன் பின்னர் பாராளுமன்றத்தில் பேசிய மாவை சேனாதிராஜா, சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஜனநாயக அணியுடன் கூட்டமைப்பு கைகோர்க்கும் என்னும் தொனியில் பேசியிருக்கிறார். இவற்றை தொகுத்து அரசியலை புரிந்துகொள்ள முற்படும் ஒரு தமிழ் குடிமகன் கூட்டமைப்பு மறைமுகமாக எதிரணிக்கே ஆதரவு வழங்குவதாக விளங்கிக்கொள்ள முயல்வார். ஆனால் கூட்டமைப்பின் இறுதிக் குரலான சம்பந்தன் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் தெரிவித்திருக்கவில்லை. ஆனால் கூட்டமைப்பு எடுக்கப்போகும் முடிவு, தமிழ் மக்களின் எதிர்காலத்தை நீண்டகால நோக்கில் பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். இதனை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு, தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளுக்குண்டு.

உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கும் முடிவை எடுக்குமாயின், அது ஒரு புத்திசாதுர்யமான முடிவாக அமையாது என்பதே எனது அபிப்பிராயம். அவ்வாறானதொரு முடிவை எடுப்பதைவிட இத் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூட்டமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தலாம். தேர்தலை பகிஸ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நஸ்டமும் ஏற்படப் போவதில்லை. ஆனால் ஒருவேளை கூட்டமைப்பு, மைத்திரிபாலவிற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கும் சூழலில், மைத்திரிபால தோல்வியடைந்தால் அதனால் தமிழ் மக்கள் பாதிப்படைய நேரிடும். ஏனெனில் எவர் ஆட்சியில் இருக்கின்றனரோ அவரோடு பேசி, பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்குண்டு. ஏனைய அரசியல் கட்சிகள் போன்று வெறும் பதவிகளை கணக்கிடும் கட்சியல்ல கூட்டமைப்பு. கூட்டமைப்பின் முன்னால் ஒரு வரலாற்றுப் பணியுண்டு. அந்த பணியை செய்ய வேண்டுமாயின் கூட்டமைப்பிடம் ஒரு நிதானமான பாதை இருக்க வேண்டியது அவசியமாகும். ஆட்சிமாற்றம் என்பதை கூட்டமைப்பு இலக்கு வைக்குமாயின், நிச்சயமாக கூட்டமைப்பின் தெரிவு மைத்திரிபால சிறிசேனதான். ஆனால் அதற்கான சூழல் இருக்கிறதா என்பதை முதலில் கணிக்க வேண்டும். அவ்வாறில்லாது வெறும் எதிர்ப்பு மனோபாவத்தில் விடயங்களை அணுகுவதன் மூலம், இடம்பெறப்போகும் விளைவுகள் பாரதூரமானதாக அமைந்துவிடலாம்.
மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் ஆதரிக்காமல் விடுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு. ஆனால் மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவை எடுத்தால் அதற்கு பின்னாலுள்ள வலுவான காரணங்கள் என்ன? இதனை கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்த முடியாமல் போகுமாயின் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவே அமையும். மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் இதுவரை தெரிவித்திருக்கவில்லை. தமிழ் மக்களின் சமஸ்டி கோரிக்கையை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் மைத்திரிபால, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தவறியும் எந்தவொரு வார்த்தையையும் உதிர்க்கவில்லை. மாறாக, சிங்கள வாக்காளர்களை இழந்துவிடக் கூடாதென்னும் அடிப்படையிலேயே, தன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் திட்டமிட்டு வெளியிட்டு வருகின்றார்.

இப்படியொரு பின்னணியில், எந்த நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ் மக்கள் மைத்திரிபாலவிற்கு வாக்களிப்பது? உதாரணமாக மைத்திரிபால இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுகின்றார் என்று எடுத்துக்கொண்டால், வெற்றிபெற்ற பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு கடப்பாடும் மைத்திரிபாலவிற்கில்லை. ஏனெனில் அதற்கான மக்கள் ஆணையை மைத்திரிபால பெற்றிருக்க மாட்டார். இந்த ஒரு விடயத்தை அடிப்படையாகக் கொண்டே, ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபாலவிற்கு நெருக்கடிகளை கொடுக்கும். இன்று மைத்திரிபால என்னும் வெறும் வெள்ளை காகிதத்தை ஆதரித்தால், நாளை அதில் எழுதப்படும் அனைத்திற்கும் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டிவரும். மீண்டும் தமிழ் மக்கள் கையறு நிலைக்கே தள்ளப்படுவர். இந்த யதார்த்தத்தை புறக்கணித்து கூட்டமைப்பு செயற்படுமாயின் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்று தவறை செய்ய நேரிடும்.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் அது புற அழுத்தங்களின் வாயிலாகவே மேற்கொள்ள முடியும். ஆனால் அப்படியான புற அழுத்தங்களின் போதும், உள்நாட்டில் அதிகாரத்திலிருக்கும் சக்தி எதுவோ, அதனுடன் பேசுவதன் மூலமே விடயங்களை கையாள முடியும். முன்னர் ஒரு முறை சம்பந்தன் குறிப்பிட்டது போன்று, எங்கு சென்றாலும் விடயங்களை இலங்கைக்குள்தான் பேசித் தீர்க்க வேண்டும். எனவே இலங்கைக்குள் விடயங்களை பேசித் தீர்க்க வேண்டுமாயின், கொழும்பில் எவர் அதிகாரத்திலிருக்கின்றாரோ, அவருடன் பேசுவதற்கு ஏற்றவாறான உறவை ஏற்படுத்திக்கொள்ளுவது அவசியம். இங்கு உறவு என்று நான் குறிப்பிடுவது, முன்விரோதமற்ற ஒரு சூழலை உருவாக்கிக்கொள்வது பற்றியே குறிப்படுகின்றேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்ததால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒரு முன்விரோதம் உருவாகியது. ஏனெனில் யுத்தம் நிறைவுற்ற பின்னணியில் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்றதன் ஊடாக, கூட்டமைப்பு தொடர்பில் ஒரு முன்விரோதம் உருவாகிவிட்டது. பின்னர் கூட்டமைப்பு எதனை பேசினாலும் அதனை எதிர்க்க வேண்டுமென்னும் மனோநிலையும் உருவாகிவிட்டது. இங்கு ராஜபக்ச செய்வது சரியென்பதல்ல விடயம், தேவை எங்களுக்கிருப்பதால், விடயங்களை மிகுந்த நிதானத்துடன் அணுகவேண்டிய பொறுப்பு தமிழர் தரப்பிற்கேயுண்டு. எனவே தன்னுடைய கடந்தகால தவறிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, அதனை நிகழ்காலத்தில் பிரதியீடு செய்யவேண்டிய கடப்பாடு கூட்டமைபிற்குண்டு.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு மைத்திரிபாலவை பகிரங்கமாக ஆதரிக்கும் முடிவை எடுக்குமாயின் அது ஒரு தூரநோக்குள்ள, சிறந்த முடிவாக அமையாது. இந்த தேர்தலில் கூட்டமைப்பு அமைதி காப்பதே சாலவும் சிறந்தது. கூட்டமைப்பால் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கூறமுடியுமாயின் அதனை செய்யலாம். ஆனால் அது ஜனநாயகத்திற்கு முரணானது என்று கூட்டமைப்பு கருதினால், அமைதியாக இருப்பது பயனுடைய ஒன்றாக அமையும். தமிழ் மக்கள் தமது சொந்த முடிவின் அடிப்படையில் சிந்திப்பதாயின், அவர்கள் ஒன்றில் பகிஸ்கரிப்பர் அல்லது தங்களின் சொந்த முடிவில் வாக்களிப்பர். தமிழ் மக்கள் தமது சொந்த முடிவில் வாக்களிப்பின், அது முன்விரோதத்திற்கு வழிவகுக்காது.                                                                              .......யதீந்திரா

Aucun commentaire:

Enregistrer un commentaire