lundi 1 décembre 2014

நக்சல் தாக்குதலில் 14 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி


 .
 
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், நக்சலைட்களுடன் நடந்த மோதலில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 14 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த முதல் கட்ட தகவலின்படி, சுக்மா மாவட்டத்தில், தெற்கு பஸ்டார் பகுதியில் உள்ள கன்ஸ்பாரா கிராமத்தில்,காலை 10.30 மணி முதல் நக்சலைட்களுடன் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் மதியம் 2 மணி வரை நீடித்தது. இரு பக்கமும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். உள்ளூர் மக்களுக்கும், கிராமவாசிகளுக்கும் நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற சி.ஆர்.பி.எப்., வாகனத்தின் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து சி.ஆர்.பி.எப்., வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள், ஜக்தல்பூர் மற்றும் ராய்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 
இந்த சம்பவத்தில், டெப்டி கமாண்டன்ட் மற்றும் அசிஸ்டண்ட் கமாண்டன்ட் உள்ளிட்ட 13 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் நடந்த காட்டில் இருந்து நக்சலைட்களை கண்காணித்து வந்ததாகவும் கூறினார். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சி.ஆர்.பி.எப்., டி.ஜி.,யும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.கடந்த வாரம் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சர் கண்டனம்: இதனிடையே, நக்சல் தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான தாக்குதல் சம்பவம் எனவும் கூறியுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் மற்றும் போலீஸ்டி.ஜி.பி.,யிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, ராஜ்நாத் சிங் நாளை சத்தீஸ்கர் வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி இரங்கல்: இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நக்சல் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்வதாகவும், அங்கு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire