mercredi 24 décembre 2014

கிறிஸ்தவ மதம் பிளவுப்பட்ட காலத்தில்


மாக்கியவெல்லி கி.பி. 1527-இல் மறைந்த காலகட்டத்தில் கிறிஸ்துவ சமயத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் நடந்தன. ஜெர்மனியைச் சேர்ந்த ´மார்ட்டின் லூதர்´ போப்பாண்டவரின் ரோமை மத பீடத்தின் போக்குகளைக் கண்டித்து மாபெரும் எதிர்ப்பு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதன் காரணமாக கிறிஸ்தவமதம் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. "புராட்டஸ்டான்ட்டிஸம்" உருவாகி ஜரோப்பிய மக்கிடையே மிக விரைவாகவே பரவிற்று.

இச்சம்பவத்தை பார்க்கும் போது மாக்கியவெல்லி [Machiavelli] வாழ்ந்த காலத்தில் சமயம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அறநெறிகள் பாவபுண்ணியங்கள் பார்க்கும் ஒழுக்க விதிமுறைகள் ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். மாக்கியவெல்லி மறைந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதாவது 18- ஆம் நூற்றாண்டில் இருந்து அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு ஜரோப்பாவில் மக்களிடம் மதப்பற்றும், மதங்கள் மீது இருந்த நம்பிக்கைகளும் குறைய ஆரம்பித்தன.

மதம் தனிமனித வாழ்வுக்கு முக்கியமில்லாததாக இருக்கலாம். அவரவர் விருப்பம் போல் சமய ஆச்சாரங்களைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் ஒரு நாட்டில் பல சமயங்கள் இருக்கும் போது, பல இனங்கள் பலமொழி மக்கள் சேர்ந்து வாழ்கின்ற போது மதங்களால் கலவரங்கள் ஏற்படுகின்றன. அந்நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனைகளையும் உருவாக்கி விடுகின்றன. ஆகையால் மதத்தலைவர்களுக்குள் சமரசம் செய்துக் கொண்டு அவரவர் மதங்களில் தீவிரக் கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்த முனையும் போது நாளாவட்டத்தில் மக்களிடையே வெறுப்புணர்ச்சி தோன்றிவிடுகிறது.

எல்லா காலகட்டத்திலும் அரசியல் வேறாகவும், மதங்கள் வேறாகவும் இருந்ததில்லை. வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது சமுதாயத்தில் இரண்டும் ஒன்றே. மனிதன் கருவாக உருவாகியதில் இருந்து ஓர் உயிர் பிறந்து வளர்ந்து முதிர்ந்து உலகை விட்டு பிரியும் வரையிலும் அதற்கு பிறகும்கூட அந்த உயிரோடு தொடர்பு கொண்டு சடங்குகளை திணித்து வைத்திருக்கிறது. ஒழுக்கம், நாணயம், நன்றியுணர்வு, அன்பு, இரக்கம், பாவம், புண்ணியம் இவற்றுக்கெல்லாம் மதம் ஊக்குவித்தும், இது இப்படித்தான் என்பது போல் மக்களிடம் அந்த உணர்வுகளைத் திணித்தும், ஒருவித பயத்ததுடனே எல்லா மதங்களும் மனிதர்களை வைத்திருக்கிறது.

மதங்களின் இந்த கோட்பாடுகளை அறிவியல் நம்பவில்லை. ஆதாரப்பூர்வமாக நாம் உணர்பவைகளுக்கு மட்டுமே வாழ்வில் கடைப்பிடித்தது. அந்த பகுத்தறிவுக் கொள்கை மக்களிடம் விரைவாக சென்றடைந்த போது அரசு அந்த உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியதாகிவிட்டது. வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது மதப்பிரச்சனைகளினால் கலகங்களும், ஏராளமான கொலைகளும் நடந்திருக்கின்றன.

´Crusades´ எனப்படும் புனித யுத்தங்களிலும் இலட்சக்கனக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களை கழுவில் ஏற்றி கொன்றிருக்கிறார்கள், தூக்கில் போட்டிருக்கிறார்கள், மதத்திற்கு எதிரானவர்கள் என்று கருதியவர்களை கம்பத்தில் கட்டிப்போட்டு தீ வைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். மரணச்சாலைகளில் இரசாயன நச்சுக் காற்றைச் செலுத்தி பல்லாயிரக்கணக்கான யூதர்களைச் சித்திரவதைச் செய்து கொன்றிருக்கிறார்கள். இறைவனுடைய கட்டளைகளை  நிறைவேற்றுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு மனிதாபிமானமின்றி மதவாதிகள் நடந்திருக்கின்றனர்.

சமயக் காழ்ப்பு உணர்ச்சி வெறியாக மாறிவிடும் போது நினைத்துப் பார்க்கவும் முடியாத கொடுஞ்செயல்கள் சர்வசாதாரணமாக நிகழ்ந்து விடுகின்றன. படிப்பறிவற்றவர்கள் மட்டுமின்றி படித்தவர்களான அறிவாளிகள் கூட மதத்திற்காக கொடூரச் செயல்களில் ஈடுட துணிந்து விடுகின்றனர். அங்கே சமயம் என்பது ஓர் அன்புத் தத்துவம் என்ற அடிப்படை நிலை முற்றிலும் மறந்து போய்விடுகிறது. இதனால் சமயங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுணர்வோ, நம்பிக்கையோ, சமாதான சகவாழ்வு என்னும் மரியாதையோ அதிகம் வளராமலேயே போய்விட்டது.

மனிதனை ஒன்றுபடுத்த மறந்த மதங்கள் இன்று உலகளாவிய நிலையில் பார்க்கையில் மனிதகுல ஓற்றுமையை பிளக்கும் சம்மட்டிகளாகவே தோற்றம் அளிக்கின்றன. இப்படித்தான் மாக்கியவெல்லி வாழ்ந்த காலத்தில் மதம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அறநெறிகள் பாவபுண்ணியங்கள் பார்க்கும் ஒழுக்க விதிமுறைகள் ஆகியவற்றின் மீது மக்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். மேலும், வரலாறுகளை விரிவாக அறிய வேண்டுமானால் THE LIFE AND THOUGHTS OF MACHIAVELLI - (1469 - 1527) என்ற நூலில் இருந்து தகவல்களை வாசிக்கலாம்...


தமிழச்சி

Aucun commentaire:

Enregistrer un commentaire