mardi 30 décembre 2014

என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்..நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல;மகிந்த

e6beda91880b2d1c7375605b02db5257.jpgதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது, அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக் கொள்கைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். நமது இரு நாட்டு உறவுகள் வலுப்பெறும் வண்ணம், அயலுறவுக் கொள்கையை அவர் விரிவுபடுத்தியுள்ளார்.

இதுவே மீனவர்களை விடுதலை செய்வதற்கான முடிவெடுக்க காரணமாக இருந்தது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்சினையாகவே நான் பார்க்கிறேன். மீன் வளத்துறையின் அமைச்சராக நான் இருந்த காலத்தில் இருந்தே இதுதான் என் பார்வை. அந்த காலக்கட்டத்தில் நான் பலமுறை இந்தியா சென்றிருக்கிறேன்.

இந்திய அமைச்சர்களை சந்தித்து, பறிமுதல் செய்யப்பட்ட எங்கள் நாட்டு படகுகளை விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறேன். இது மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய ஒரு பிரச்சினை. மீன்களுக்கு எல்லை தெரியாது.

ஆனால் மீனவர்கள் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நான் மறுக்கிறேன். தாக்குதல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாரையும் தாக்கக் கூடாது என தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளோம். எனவே, தாக்குதல்கள் நடக்காது. இவை எல்லாம் கட்டுக் கதைகள்.

அதுமட்டுமல்லாது நான் இலங்கை, இந்திய தமிழர்களுக்கு எதிரானவர் என்ற பரவலான பார்வை உள்ளது. நான் எப்படி தமிழர்களுக்கு எதிராக இருக்க முடியும். எனது அமைச்சரவையில் உள்ள தமிழ் அமைச்சர்களைக் கேட்டுப் பாருங்கள், எம்.பி.க்களைக் கேளுங்கள். என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது.

என் உறவினர் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். மற்றும் ஒரு உறவினர் கண்டியைச் சேர்ந்த, மலையகத்து இஸ்லாமியரை திருமணம் செய்துள்ளார். இது ஒரு சிறிய நாடு. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே கலப்புத் திருமணங்கள் இங்கு சகஜம்

நான் இந்த நாட்டின் ஜனாதிபதி. நான் அனைவரையும் ஒன்றாகவே கருதுகிறேன். மதம், சாதி மற்றும் இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது. வாக்குக்காக, மக்களை எங்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காகவும் எதிர்க் கட்சிகள் எங்கள் மீது புழுதியை வாரித் தூற்றுகின்றன.

ஆனால் என்னால் மீண்டும் பதவிக்கு வரமுடியும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். இல்லை என்றால் முன் கூட்டியே தேர்தலைச் சந்திக்க மாட்டேன்.

எனது பதவிக் காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அந்த 2 ஆண்டுகளை தியாகம் செய்து தான் தேர்தலை சந்திக்கிறேன். ஜப்பான் போல, ஜப்பான் பிரமர் ஷின்சோ அபேயும் முன்கூட்டியே தேர்தலை சந்தித்து 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ளார். எனக்கும் நம்பிக்கை உள்ளது.

இந்தியாவை பூர்விமகாக கொண்ட தமிழ் மக்களை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. மற்ற அரசுகள் அவர்களை கவனிக்கும் கடமையை மலையகத்தில் உள்ள நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டார்கள். அனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அவர்களை கவனிக்கத் தொடங்கியுள்ளோம்.

அதுமட்டுமல்லாது மலையகப் பகுதிகளை நாங்கள் முன்னேற்றத் தொடங்கியுள்ளோம். வீதிகளை  அமைக்கிறோம், வீடுகள் கட்டிக் கொடுக்கின்றோம். இவற்றை அந்த நிறுவனங்கள் முன்பே செய்திருக்க வேண்டும். அதனால் நாங்கள் இப்போது செய்கிறோம்.

மேலும் நல்ல பாடசாலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.. அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்கிறார்கள். மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயற்பாடே.

நான் தமிழ் கற்க விரும்புகிறேன். நான் இன்னும் ஒரு தமிழ் மாணவன். ஒரு தலைவர் என்னை சிங்களத்தில் பேசச் சொன்னார். இங்கே  சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம். என 3 அலுவலக மொழிகள் உண்டு. ஆகவே தான் நான் 3 மொழிகளிலும் பேசினேன்.

இங்கே தமிழர்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். இந்தியாவை ஒப்பிடும்போது அவர்களின் தொகை குறைவு. ஆனால் இங்கே எல்லோருக்கும் 3 மொழிகளும் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தமிழ் மற்றும் பிரதான மொழி சிங்களம், உள்ளிட்ட 3 மொழிகளையும் கற்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம். அவர்கள் இவற்றை கற்க வேண்டும்.

நீங்கள் தமிழ் பேசினால் எனக்கு புரியாது. ஆகவே எனக்கு சந்தேகம் வரும். நான் சிங்களத்தில் பேசினால் என்னை சந்தேகிப்பார்கள். இதற்கு சிறந்த வழி ஒருவர் மொழியை மற்றவர் கற்பதுதான். எங்கள் மக்களிடம் இதைத்தான் சொல்லியிருக்கிறேன். இதற்கான பாதையை எங்கள் மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். சிங்கள மக்களும் தமிழ் மொழி கற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire