samedi 3 novembre 2012

ஹெஜிங் வழக்கு இலங்கைக்கு எதிராக தீர்ந்தது - 60 மில்லியன் டொலர் நட்டம்


டொச் வங்கிக்கு எதிராக ஹெஜிங் வழக்கில் அந்த வங்கிக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சி.பி.சி) 60 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டுமென அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்தியஸ்த நிறுவனம் தீர்ப்பளித்துள்ளது.  உரிய நேரத்தில் கடனை செலுத்தாமல் விட்டமைக்கான வட்டியுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அக்கடனை செலுத்தவேண்டியிருக்குமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது எங்களுக்கு எதிரானது. நாம், இந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கத் தேவையான நடவடிக்கைகள் பற்றி யோசித்து வருகிறோம் என சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
2007 இல் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துகொண்டிருந்தபோது வங்கிகளிடம் இழப்பீடு பெறும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை செய்தது.
ஆனால்இ உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தாலும், உடன்படிக்கை செய்துகொண்ட வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பணம் வழங்கும் வகையிலேயே இந்த உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது.
பிரிட்டனை தளமாகக் கொண்ட ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி, சிட்டி பாங்க், டொச் பாங்க் உட்பட 5 வங்கிகளுடன் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டது.
2008 ஜூலையில் உலக சந்தையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் 147 டொலர் வரை உயர்ந்த நிலையில் இந்த உடன்படிக்கை மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நன்மை பெற்றது.
ஆனால் அதே வருட பிற்பகுதியில் மசகு எண்ணெய் விலை 40 டொலரைவிட குறைந்ததால் பெருந்தொகை பணத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியிருந்தது.
இந்த உடன்படிக்கையின்படி பணத்தை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுத்ததாக குற்றம் சுமத்தி, ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பாக ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு 162 மில்லியன்  அமெரிக்க டொலரும் வட்டியும் வழங்கப்பட வேண்டும் என லண்டன் நீதிமன்றமொன்று அளித்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடுத்த மேன்முறையீட்டு வழக்கில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தோல்வியுற்றுள்ளது.
இந்நிலையிலேயே டொச் வங்கிக்கு எதிராக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தாக்கல் செய்த வழக்கிலும் தோல்வியடைந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire