jeudi 1 novembre 2012

ராஜீவ் காந்தியின் படுகொலையின் சதி .சி.பி.ஐ. அதிகாரிகள் கொழும்பு வந்து கே.பி. யை விசாரணை




இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 21 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்தியாவின் பிரதான புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ. அதிகாரிகள் கொழும்பு வந்து விடுதலைப் பலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியதாக இந்திய ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய சதி முயற்சிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் சி.பி.ஜி. அதிகாரிகள் அதன் ஒருபகுதியாகவே கே.பி. யை விசாரணைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இரண்டு நாட்கள் இந்த விசாரணை இடம்பெற்றதாகவும், இலங்கை அரசாங்கம் இதற்கான அனுமதியை வழங்கியதாகவும் தெரியவந்திருக்கின்றது.

ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பாக இந்த விசாரணையின்போது கே.பி. தகவல் விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜீவ் கொலையில் முக்கியமான ஒரு பங்கு கே.பி.க்கு இருக்கலாம் எனக் கருதும் சி.பி.ஐ. அதிகாரிகள், இந்தக் கொலைத் திட்டம் பற்றி அவர் முழுமையாக அறிந்திருக்கலாம் எனவும் நம்புகின்றார்கள்.

கே.பி. மீதான விசாரணைகளைப் பூர்த்திசெய்துகொண்ட பின்னர் அவர் தொடர்பில் மலேஷியா மற்றும் இலங்கை அதிகாரிகளிடம் மேலதிக தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள்  கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதான ஆயுதக்கொள்வனவாளராகவும், சர்வதேசப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்த கே.பி., போர் முடிவுக்கு வந்த பின்னர் மலேஷியாவில் தங்கியிருந்த நிலையில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார். தற்போது இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் அவர், கிளிநொச்சியில் தனது அலுவலகத்தையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire