ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்டதூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அதிநவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது.
இந்த புதிய விமானத்திற்கு குயாகப் எப் - 31ஏ (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் முகமது அகமதினேஜத் நேற்று முன்தினம் அறிவித்தார்.
மேலும், அந்த விமானத்தை பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை விமானியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கூறிய அவர் இதை ஒரு குறுவாள் என வர்ணித்தார்.
இந்த விமானத்தை பல ஆயிரம் மணி நேரம் விமானிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார். 1979 ஆம் ஆண்டு புரட்சி தினத்தின் 34 ஆவது ஆண்டு விழா நேற்று முன்தினம் தெக்ரானில் நடந்தது. அதை தொடர்ந்து இந்த புதிய போர் விமானத்தை அவர் வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அக்காட்சி அரசு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது
Aucun commentaire:
Enregistrer un commentaire