mercredi 6 juin 2012

ராஜபக்ஷவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள்

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இன்றும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று புதன்கிழமை காலை காமன்வெல்த் நாடுகளின் பொருளாதார அமைப்பின் ஏற்பாட்டில் மகிந்த ராஜபக்ஷ உரையாற்றவிருந்த நிகழ்வு நேற்று மாலை இறுதித் தருணத்தில் ரத்து செய்யப்பட்டது.
'மிக கவனமாக பல விடயங்களை ஆராய்ந்த பின்னர், இந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது' என்று மட்டும் காமான்வெல்த் பொருளாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று மதியம் காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் சார்பில் எலிசபெத் மகாராணியை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் விருந்துபசாரத்தில் இலங்கை ஜனாதிபதியும் கலந்து கொண்டார்.
முன்னதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
அதேவேளை, மகாராணியாருக்கான பகல் விருந்துபசாரம் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் தலைமை அலுவலகமான மால்பரோ ஹவுஸ் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிரானவர்களும் மகிந்தவுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு லண்டனிலிருந்து ரோம் பயணமாகிறார்.
நாளை வியாழக்கிழமை அவர் வத்திக்கானில் போப் பெனடிக்ட் அவர்களை சந்திக்கவுள்ளார்
.

Aucun commentaire:

Enregistrer un commentaire