vendredi 15 juin 2012

இந்தியா உதவி கிளிநொச்சி, முல்லைத்தீவு நவீனத்துக்கு

வடக்கே இறுதிக்கட்ட மோதல்கள் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் போரினால் சேதமுற்ற வர்த்தக நிலைய கட்டிடங்களைத் திருத்துவதற்கு 10 கோடி ரூபா நிதியுதவியை வழங்க இந்தியா முன்வந்திருக்கின்றது.

   இலங்கை வணிகக் கைத்தொழில் ஒன்றியங்கள் சம்மேளனத்தின் முயற்சியையடுத்து, இந்த நிதியுதவி கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

   யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, கவனிப்பாரற்றுள்ள வர்த்தக சமூகத்தினருக்கு உதவ வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவுடம் விடுத்த வேண்டுகோளின்படியே இந்த நிதியுதவி கிடைத்திருப்பதாக வணிகக் கைத்தொழில் ஒன்றியங்கள் சம்மேளனத்தின் ஆலோசகரான மூத்த விரிவுரையாளர் டபிள்யூ.ஜே.சூசைரட்னம் தெரிவித்தார்.

   எனினும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து வர்த்தகர்களுக்குமாக இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கப்படவில்லை என்றும் இதனால் முதற்தடவையில் உதவி கிடைக்காதவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

   பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான இந்த உதவித்திட்டத்தில் இலங்கை அரசாங்கம் நேரடியாக பங்களிப்பு செய்யாத போதிலும் உதவித்திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire