dimanche 24 juin 2012

ராஜினாமா ஜனாதிபதியின் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார

ஜனாதிபதியின் விவசாய அபிவிருத்தி ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் விவசாயத்துறை தொடர்பான  முட்டாள் தனமான தீர்மானங்கள் பலவற்றை அரசாங்கம் மேற்கொண்டதன் காரணமாகவே தான் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். "நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலை 24 ரூபா என உறுதியளிக்கப்பட்டது. இப்போது அது 18 ரூபாவாக குறைக்கப்பட்டமை விவசாயிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டு நான் இதை கூறவில்லை. அநுராதரபும், பொலன்னறுவை, மெதிரிகிரிய, கவுடுல்ல, கினிதம, ஹிங்குராக்தமன உட்பட  இடங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்தேன். இப்பயணங்களுக்கு பின்னர் அறிக்கையொன்றை தயாரித்து, பொறுப்பான அனைவரிடமும் சமர்ப்பித்து இப்பிரச்சினையை தீர்க்குமாறு கோரினேன். ஆனால் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை" என அவர் கூறினார். "குண்டசாலை விவசாய கல்லூரி உள்ள இடத்தில் விமான நிலையமொன்றை அமைப்பது முட்டாள்தனமான திட்டம். சீதா எலிய விதை நிலையத்திலும் அவர்கள் விமான நிலையமென்றை அமைக்க விரும்புகிறார்கள்"  எனவும் அவர் கூறினார். தனது எதிர்கால அரசியல் குறித்து இன்னும் சில தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இறுதியாக 2004 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ஹேமகுமார பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த அவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.  பின்னர் அவர் ஜனாதிபதியின் விவசாயத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.இலங்கையின் நிலையான விவசாய அபிவிருத்திக்காக சேதன விவசாயத்தை கடைப்பிடித்தல் தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக கடந்த வருடம் பேராதனை பல்கலைக்கழகத்தினால் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire