mercredi 20 juin 2012

குண்டர் குழுக்களின் பின் புலத்துடன் அரசியல் நடத்த வேண்டிய நிலை

குண்டர் குழுக்களின் அனுமதியினைப் பெற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய பின்புலம் ஒன்று நாட்டில் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார். கட்டுவன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;அச்சுறுத்தல்களை விடுக்க கடந்த காலங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சில குழுவினர் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்று செயற்படுகின்றமை மறைக்க முடியாத உண்மை. இந்தக் குழுவினர் தமது தலைவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுகின்றவர்களை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கிகளை உபயோகிப்பது பிரசித்தி பெற்றுள்ளது.
கட்டுவன பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு அப்பாவிகள் உயிரிழந்துள்ள சம்பவத்தில் இருந்து, அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றவர்கள் சுதந்திரமாகத் தப்பிச் செல்கின்றமைக்கு அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு உள்ளமை தெளிவாகின்றது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம், சிலாபத்தில் மீனவ ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஆகியவற்றில் இருந்து இந்த விடயங்கள் மேலும் உறுதி செய்யப்படுகிறது.
கட்டுவன தாக்குதல் குறித்து போலியான கதைகளைக் கூறாமல் தாக்குதலை மேற்கொண்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு அரசாங்கம் எப்போது அனுமதி வழங்குமென்று தெரியவில்லை.
இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகச் சம்பவமொன்று கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்றது. கட்டுவன சம்பவத்திலிருந்து அச்சுறுத்தல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றமை தெளிவாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கட்டுவனவில் இடம்பெற்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக அரசியல் சார்பான அல்லது அரசியல் சார்பற்ற வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய, குற்றங்களை இல்லாமற் செய்வது அரசாங்கம் மற்றும் சமூகத்தினது முக்கியதொரு பொறுப்பென குறிப்பிட்டுள்ளது. அமைதியான முறையில், வீடொன்றில் நடைபெற்ற சிறியளவிலான அரசியல் கூட்டம் ஒன்றின் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டமை பாரதூரமான நிலைமையென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire