mercredi 27 juin 2012

கிழக்கு மாகாணத்தின் முதல் அமைச்சர். 60 அல்லது 75 நாட்களில் தேர்தல்


இலங்கையின் கிழக்கு , வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாண கவுன்சில்கள் இன்று,புதன்கிழமை, நள்ளிரவிலிருந்து கலைக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
கிழக்கு மாகாணக் கவுன்சில் கலைக்கப்படும் உத்தரவில் மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுவிட்டார் என்று கிழக்கு மாகாணத்தின் முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனவே, இலங்கை அரச படைகள் கிழக்கு மாகாணத்திலிருந்து, விடுதலைப்புலிகளை அப்புறப்படுத்திய பின்னர், அந்த மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை, இன்று ( புதன் கிழமை) நள்ளிரவுடன் பதவிழக்கிறது.
தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறிய சிவநேசத்துரை சந்திரகாந்தன், இன்னும் 60 அல்லது 75 நாட்களில் தேர்தல் நடக்கலாம் என்றார்.
மாகாணக் கவுன்சில் கலைப்புக்கு எதிராக மாகாண சபை சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அது எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தற்போது அரசியல் சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக இருப்பதாக தாங்கள் கருதுவதால், மாகாண கவுன்சில் கலைப்புக்கு தான் பரிந்துரை செய்த்தாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.
மாகாணக் கவுன்சிலைக் கலைப்பதை எதிர்த்து நீதிமன்ற வழக்கொன்று இருந்தாலும், கவுன்சிலைக் கலைப்பதில் தடையேதும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்ட்து என்றார்.
வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிடும் என்றார் அவர்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவி, தேர்தலுக்குப் பின்னர், தமிழருக்கே தொடர்ந்து தரப்படுமா என்பது குறித்து பதிலளித்த அவர், தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அந்த அடிப்படையில் முதலமைச்சர் பதவியும் தமிழர்களுக்கே கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire