vendredi 29 juin 2012

விடுதலைப் புலிகளை போல நடக்கிறது:அரசு


இலங்கையில் மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்துவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த ஏன் முன்வரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்
ஜனாதிபதிக்கான தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வடக்கிலும் இடம்பெற்று அங்குள்ள மக்களும் வாக்களித்த்த போது, ஏன் அரசு வடமாகாண சபைக்கான தேர்தலை அறிவிக்காமல் இருக்கிறது எனவும் வினவியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்.
"




வடபகுதி மக்கள் ஒரு மாகாண சபையை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமக்கான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அம்மாகாண மக்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனவும் ரனில் கூறுகிறார்.
மாகாண சபைக்கான தேர்தலை நடத்த விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை என்றும், போர் முடிந்த பிறகும் தேர்தலை நடத்த அரசு முன்வராத போது அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன வித்தியாசம் எனவும் ரனில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண சபைக்கு தேர்தலை நடத்துவது அரசின் தலையாய பொறுப்பு என்றும், அதன் மூலம் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீள்குடியேற்றம் உட்பட அனைத்து அம்சங்களிலும் ஈடுபடும் நிலை ஏற்படும் எனவும் பிரதான எதிர்கட்சியின் தலைவர் கூறுகிறார்.
இப்படியான சூழலில் அரசு ஜனநாயகத்தை தாங்கள் மதித்து நடப்பதாகக் கூறுவது கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமது கட்சி அதில் போட்டியிடும் எனவும் ரனில் தெரிவித்துள்ளார்
வடமாகாண சபைக்கான தேர்தலை அரசு திட்டமிட்டு நடத்தாமல் உள்ளது என்று எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அரச தரப்பு மறுக்கிறது.
வடக்கு மாகாணத்துக்கான சிறப்பு செயலணிக் குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வடபகுதியின் பல இடங்களில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாததும், நீதிமன்ற உத்தரவுகள் காரணமாகவுமே வடமாகாண சபை தேர்தல் தள்ளிப் போவதாக தெரிவிக்கிறார்.
இது குறித்து தானும், மாற்றொரு அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியிடம் வடமாகாண சபையின் தேர்தல் குறித்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சியினர் யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமால் அரசின் மீது குற்றஞ்சாட்டுவது நியாயமில்லை எனவும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்

Aucun commentaire:

Enregistrer un commentaire