இனப்பிரச்சினையின் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்ற மறுப்பதற்கான விளக்கத்தைக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் அளித்திருக்கின்றார். அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் அந்தப் பேச்சுவார்த்தையின்போது கூட்டமைப்பு முன்மொழிந்த விடயங்களைத் தெரிவுக் குழுவுக்கான அரசாங்க ஆவணங்களில் உள்ளடக்கவில்லை என்பதும் சுமந்திரன் கூறிய பிரதான காரணங்கள். இக்காரணங்களுக்காகக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்பது வேடிக்கையான தர்க்கம். விதண்டாவாத சட்டத்தரணிகள் இப்படியான தர்க்கங்களை முன்வைப்பது வழக்கம்.
தமிழ் மக்கள் தங்களை எதற்காகத் தெரிவு செய்தார்கள் என்பதையிட்டுக் கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தடுமாற்றம் இருப்பதுபோல் தெரிகின்றது. அரசாங்கத்தின் எல்லாச் செயல்களிலும் குறைகண்டுபிடித்து எதிர்ப்பு அரசியல் செய்வதற்காகத் தெரிவு செய்தார்களா? அல்லது கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுவதற்குத் தெரிவு செய்தார்களா? கூட்டமைப்புத் தலைவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, எதிர்ப்பு அரசியலுக்காகவே தங்களைத் தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள் என்று நினைப்பது போல் தெரிகின்றது. கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை, சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் கூட்டமைப்புத் தலைவர்கள் கைநழுவவிடும் இன்னொரு சந்தர்ப்பமாகிவிடுமா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் எழுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire