lundi 5 novembre 2012

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே ஒரே தீர்வு! ஐநாவில் ஜி.கே.மணி


இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார். இலங்கையில் நடைபெற்ற போரின்போதும், அதற்கு முன்பும் பின்பும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது தொடர்பான விசாரணை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.  அதில் பங்கேற்க ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருந்த பசுமைத் தாயகம் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி பாமக தலைவர் ஜி.கே.மணியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் அருளும் விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் ஜி.கே.மணி வேட்டி சட்டை அணிந்தே பங்கேற்றதுடன் தமிழிலேயே பேசியுள்ளார்.
கூட்டத்தில் ஜி.கே.மணி பேசியது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
இலங்கைப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் நடப்பதை அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கக்கூடாது. இன அழிப்பாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை இனப் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு. உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் பேசியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire