mercredi 19 décembre 2012

நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது.


நாசா தனது இரண்டு செயற்கைக்கோள்களை நிலவுடன் பலவந்தமாக மோதச்செய்து நிலவின் தோற்றம் குறித்த முக்கிய பரிசோதனைகளை நடத்தியிருக்கிறது.
நிலவு எப்படி உருவானது, அதன் மேற்பரப்பு, அதன் உட்கரு மற்றும் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு குறித்த மேலதிக புரிதலுக்காகவே அமெரிக்காவின் நாசா நிறுவனம் இந்த முக்கிய பரிசோதனையை நடத்தியிருக்கிறது.
எப் மற்றும் புளோ என்கிற பெயரிலான இரண்டு நாசா செயற்கைக்கோள்கள், கடந்த ஒரு ஆண்டாக நிலவைசுற்றிவந்து நிலவு குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பி வந்தது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் நாசா நிறுவனம் நேற்று திங்கட்கிழமை பலவந்தமாக நிலவில் கொண்டுபோய் நேரடியாக மோதச்செய்திருக்கிறது.
அப்பல்லோ17 விண்கலத்தில் நிலவுக்கு மனிதர்கள் சென்று சரியாக நாற்பது ஆண்டுகள் கழித்து இந்த இரண்டு செயற்கைக்கோள்களை நாசா நிறுவனம் நிலவில் மோதவைத்திருக்கிறது.
இந்த இரண்டு செயற்கைக்கோள்களிலும், மிக சக்திவாய்ந்த புகைப்படக்கருவிகள் மற்றும் ஈர்ப்பு விசையை அளக்கும் ஈர்ப்புவிசை அளவைமானிகள் பொருத்தப்பட்டிருந்தன.
எனவே இந்த இரண்டு செயற்கைக்கோள்களும், கடந்த ஒரு ஆண்டாக நிலவை சுற்றி பயணம் செய்யும்போது இந்த புகைப்படக்கருவிகளும், ஈர்ப்புவிசை அளவைமானிகளும் தொடர்ந்து இயங்கின. இதன் விளைவாக, நிலவின் ஒளிப்படங்களும், நிலவின் பல்வேறுபகுதியின் ஈர்ப்புவிசையும் தொடர்ந்து நாசா விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டன.
இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்கள், புகைப்படங்கள், எல்லாமே இதுவரை நிலவு குறித்து கிடைத்திருக்கும் தகவல்களிலேயே மிகத்துல்லியமானவையாக இருப்பதால் நிலவின் தோற்றம் மிகத்தெளிவாக தெரிவதாக நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
இறுதியாக இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் போய் நிலவில் வடதுருவத்தில் இருக்கும் இரண்டுகிலோமீட்டர் உயரமுள்ள ஒரு மலைமுகட்டில் போய் மோதின.
சுமார் 30 நொடி கால இடைவெளியில், ஒன்றுக்கொன்று மூன்று கிலோமீட்டர் தொலைவில் இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் நிலவில் மோதிச் சிதறின.
ஒவ்வொன்றும் ஒரு துணி துவைக்கும் வாஷிங்மெஷின் அளவுள்ள இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் நிலவில் போய் மோதியபோது உருவான பள்ளம் மற்றும் அதனால் நிலவின் மேற்பரப்பில் உருவான பாதிப்புக்கள் குறித்து இன்னமும் முழுமையாக அளவிடப்படவில்லை.
என்றாலும், இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் நிலவில் மோதுவது வரை நாசாவுக்கு அனுப்பிய ஒளிப்படங்கள் மற்றும் நிலவின் ஈர்ப்புசக்தியின் அளவுகள் ஆகியவை நிலவு குறித்த புதிய புரிதலை தங்களுக்கு அளித்திருப்பதாக நாசா நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
நாசாவின் இந்த சோதனை முயற்சியின் மூலம் நிலவு குறித்த மேலதிக புரிதல் நாசாவுக்கும் விண்ணியல் துறைக்கும் கிடைத்திருப்பதாக கூறுகிறார் சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குநர் முனைவர் சவுந்தரராஜபெருமாள்.
நிலவு தோன்றிய விதம் குறித்து நிலவும் இரண்டு பிரதான விஞ்ஞான விளக்கங்கள் தொடர்பில் இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் பூர்வாங்க தகவல்கள் முக்கிய விளக்கங்களை அளிப்பதாக கூறுகிறார் அவர்

Aucun commentaire:

Enregistrer un commentaire