vendredi 21 décembre 2012

லண்டனில் சந்திரிகா.நீடித்த சமாதானத்தை அடைவதற்கான மூல காரணிகளை அடையாளம் காணவேண்டிய அவசியம் உள்ளது

      -சந்திரிகா குமாரதுங்க
chandrika-2நீண்ட காலமாக தீhக்கப்படாத முரண்பாடுகளின் தீவிர வெளிப்பாடே பயங்கரவாதம். எனினும் முரண்பாடு எப்போதுமே எதிர்மறையான ஒன்று அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வேறுபட்ட இலட்சியங்கள் மற்றும் எதிரான இலக்குகள் என்பனவற்றுக்கு இடைப்பட்ட விளைவுகளின் தொடர்பினாலேயே மோதல்கள் உருவாகின்றன, மற்றும் அது சர்ச்சைகள் உருவாக்கப்படும் ஒரு இடமாகவும் உள்ளது. ஜனநாயகம் சரியாக செயல்படுவதுக்கு மோதல் அவசியம், மற்றும் சமூகமாற்றங்களுக்கு வலுவூட்டுவதையும் மற்றும் அதனை முன்னேற்றுவதையும் அதனால் அணிதிரட்;ட முடியும். மோதலின் வெளிப்பாடு ஒரு வன்முறையான வடிவத்தைப் பெறும்போது,மோதல் எதிர்மறையானதும், மற்றும் அழிவேற்படுத்துவதுமான ஒன்றாக மாறிவிடுகிறது.
ஜனநாயக அரசாங்கங்கள் சர்ச்சைகளை வெளிப்படுத்த அனுமதிப்பதோடு அவற்றுக்கு பதிலும் அளிக்கின்றன. சரியான உபகரணங்களைப் பயன்படுத்தினால் ஜனநாயகம், மோதல் மேலாண்மைக்கான ஒரு மேடையாகச் செயல்படும். அதற்கு தேவையாக இருப்பது, முரண்பாடுகளை நசுக்குவது அல்லது அவற்றை தீர்க்கவேண்டியது போன்ற செயற்பாடுகளல்ல, ஆனால் அவற்றை சரியாக நிர்வகிக்க வேண்டிய செயற்பாடுகள். அதற்கான அடிப்படை மூல காரணிகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
இந்தக் கட்டத்தில் நான், இஸ்லாமிஸ இராணுவம் மற்றும் அதன் சித்தாந்தம் போன்ற விடயங்களை எழுப்புவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். உலகளாவிய இஸ்லாமிசம் என்பது இஸ்லாத்திலிருந்து வேறுபட்டது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். இஸ்லாம் முஸ்லிம் மக்களின் மதம், அதேவேளை இஸ்லாமிசம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தம்.
உலகளாவிய இஸ்லாமிச இயக்கத்தின் முதன்மைச் சித்தாந்தவாதி - ஒசாமா பின்லாடனின் அநேக அறிக்கைகள், நாஸ்திகத்துக்கு எதிராக முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தும்படி அவர் அழைப்பு விடுத்ததின் பிரதான காரணங்களை வெளிப்படுத்துகின்றன.
முதலாவதாக, முஸ்லிம் அல்லாத நாஸ்திக படைகள் ஹிஜாஸ் பூமியில் முன்னிலையில் உள்ளன. அதில் சகித்துக்கொள்ள முடியாதது, அதிகாரம் மிக்க கலிபாக்களும் மற்றும் துருக்கிய வழிவந்த ஆத்மன் சக்கரவர்த்திகளும் இந்த கருத்தை மறுதலித்ததுதான்,
அதேவேளை மேற்கத்தைய காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் கலிபாக்கள் ஒழிக்கப்பட்டார்கள் மற்றும் மேற்கத்தைய படைகளால் புனித பூமி ஆக்கிரமிக்கப்பட்டது.
இரண்டாவதாக தீர்க்கப்படாத இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினை மற்றும் யூதப் படைகளால், பலஸ்தீன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது.
இந்த பின்லாடனின் முறைப்பாடுகளின் அடிப்படையில்தான் எல்லா முஸ்லிம்களுக்கும் நெருக்கடி உருவாக்கப்பட்டது. அது ஒரு நாட்டிற்கான ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை ஆனால் முஸ்லிம் சமூகமான உம்மாவுக்கான முழு நெருக்கடியாக உருவானது. இதன்படி உலகளாவிய இஸ்லாமிஸ இயக்கம் உருவெடுத்தது. அதன் எதிரி தனி ஒரு தேசிய வஸ்துவாக இல்லாமல், புனிதபூமியான ஜெருசலேத்தை மட்டுமன்றி ஹிஜாஸையும் மீறல் புரிந்த மேற்கத்தைய நாஸ்திகப் படைகளாக இருந்தது.
அதே நேரம் முஸ்லிம்களுக்கான ஒரு இயக்கம், பக்தியான வாழ்க்கை நெறியை பின்பற்றும் ஒரு இயக்கம் தோற்றம் பெற்றது. ஒரு அரசியல், இஸ்லாமிஸ இயக்கம், தனித்தனியான முஸ்லிம் நாடுகளில் உருவாக்கப்பட்டது, அதன் அரசாங்கங்கள் ஷரியாவை பின்பற்றும்படி அழுத்தங்களை கொடுத்தன.
கடந்த நூற்றாணடில் அல்லது அதன்போது முஸ்லிம்களின் இக்கட்டான நிலையின் விளைவாக இஸ்லாமிஸ கரு தோன்றியது. இஸ்லாமிஸம் பற்றிய தனது சிறப்பான ஆய்வுக் கட்டுரையில், மெக்நாத் தேசாய், இஸ்லாமிய சித்தாந்தம் “ முஸ்லிமின் ஆன்மாவுக்கு எற்பட்ட ஆழமான காயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடு மற்றும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்த காயத்தை மட்டும்தானா? ஆனால் பல வழிகளிலும் இந்த தற்துணிவு தவறாகவும் மற்றும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தும் செய்முறைக்கு எதிரான உற்பத்தியை வழங்குவதாலும், இந்த சித்தாந்தத்தை பற்றி நாங்கள் ஒரு விமர்சனத்தை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது” என கூறுகிறார்.
இந்தக் கட்டத்தில் இளைஞர்களைக் கொண்ட ஒரு கருத்தியல் இராணுவம், மேற்கத்தைய செல்வாக்கு மற்றும் அதன் பிடியிலிருந்து முஸ்லிம் உலகை விடுவிப்பதற்காக போராடுவதற்காக பிறந்து வந்தது. இஸ்லாமிஸ இயக்கம் உலகம் முழுவதையும் அடைந்ததுக்கு பரந்துகிடக்கும் நவீன தொடர்பாடல் தொழில்நுட்பங்கள் மற்றும் விமானப் பயணங்கள் என்பன குறிப்பிடத்தக்க வசதியை எற்படுத்தின.
உலகளாவிய இஸ்லாமிஸத்தின் நவீன பயங்கரவாதம் உட்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் வழங்கும் சவாலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அப்போது வியூகம் வகுக்கப்பட்டது.
  1. முதலாவதாக மோதலுக்கு வழியேற்படுத்தும் சமூக பொருளாதார, கலாச்சார மற்றும் பொருளாதார வேர்களை புரிந்து கொள்ள தீவிர முயற்சி மெற்கொள்ளப்பட்டது.-அப்போதுதான் எற்றத் தாழ்வுகள், பாகுபாடுகள் என்பனவற்றை திறமையாக தீர்த்து வைக்க முடியும்.
  2. தீர்வுகளை திறமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் தெளிவான கண்ணோட்டம் மற்றும் நேர்மையான அரசியல் விருப்பம் என்பனவற்றைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்
  3. கிளர்ச்சிக் குழுவை கட்டாயம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுத்த வேண்டும்.
  4. அவர்கள் அதற்கு இணங்க மறுக்கும் பட்சத்தில் அவர்களின் ஆதரவாளர்களின் மனங்களையும் இதயங்களையும் வெல்வதற்கு  ஏற்ற திறமையான தீர்வுகளை உருவாக்கவதற்கான உத்திகளை வகுக்க வேண்டும். இது இறுதியில் கிளர்ச்சி அமைப்புகளிடமிருந்து அவர்களின் ஆதரவை பின்வாங்கச் செய்துவிடும்.
  5. அது பலவீனமடையும்போது, கட்டாயமாக பேச்சு வார்த்தைக்கு செல்லவேண்டியதை கிளர்ச்சிக்காரர்கள் உணர்வார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படலாம் மற்றும் இராணுவத்தை கைவிட நேரிடலாம்.
ஒவ்வொரு சாத்தியமான உத்திக்கும் ,முதலில் மோதலுக்கான காரணத்திற்கான தீர்வினை கண்டறிய வேண்டும், தீவிரமான இராணுவத் தாக்குதல்களை தொடருமுன் அவற்றை முயற்சி;த்துப் பார்க்கவேண்டியது அவசியம் என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
அத்தகைய மூலோபாயம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்டிருந்தால் பயங்கரவாதிகள் அல்லது கிளர்ச்சிக் குழுக்களின் விடயத்தை பொறுத்தவரை அவர்களால் அத்தகைய தீவிர நிலைக்கு தங்களை பலப்படுத்துவதற்கான காரணம் எதுவும் கிடைத்திருக்காது, என்பதை சொல்ல விரும்புகிறேன்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இராணுவம் ஈடுபட்ட அரங்குகளிலிருந்து அங்கு நடைபெற்றதை அறிந்துகொள்ள எங்களுக்கு போதிய சாட்சியங்கள் கிடையாது, துப்பாக்கிகளினாலும் மற்றும் குண்டுகளினாலும் மட்டும் வன்முறைக்கு முடிவு கட்டிவிட முடியாது.
இந்தக் கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்  தலைவர் என்கிற வகையில் எனது தனிப்பட்ட அனுபவங்களை விவரிக்க அனுமதியுங்கள். ஸ்ரீலங்கா சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு, கூட்டாட்சி மற்றும் அதனை உள்ளடக்கிய கருதான் சரியான தீர்வு என்பதில் நான் உறுதி கொண்டிருந்தேன்.
அரசாங்கத்தின் பிரத்தியேகமான சிங்கள பௌத்த கருத்தை ஆதரிப்பவர்கள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகளில் உள்ள சிறியளவிலான மேல் தட்டு வாசிகளும் மற்றும் மதகுருமார்களும், மற்றும் அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்களுமே என்று ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.
வெகு ஜனங்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் எந்த விதமான தீவிரவாத அரசியல் கருத்துக்களிலும் உறுதி கொண்டிருக்கவில்லை.
நாங்கள் சிறுபான்மையினருடனும், அவர்களின் அரசியல் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தைகளை நடத்தி பொருத்தமான ஒரு சலுகையை வழங்கவேண்டும் என்று புரிந்து கொண்டோம். எங்களிடம் இருப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் எங்கள் வலிமை குறையடையாது. மாறாக அது பிளவுபட்டிருக்கும் சமூகங்களை ஒன்று சேர்த்து, மோதலின் ஆரம்பத்திலிருந்து நாங்கள் இழந்திருந்த ஓரங்கட்டப் பட்டுள்ளவர்களின் தொழில் திறன்கள், திறமைகள், மற்றும் அறிவு என்பனவற்றை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்து எங்கள் வலிமையை இன்னமும் அதிகரிக்கச் செய்யும்.
அனைத்து மக்களினதும் பல்வேறு விதமான திறன்கள் மற்றும் திறமைகள், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் தீவிரமாக பங்காற்றும்போது, அவை பிளவு பட்டுள்ள எங்களது தேசத்தை தீவிரமாக மேம்படுத்தி ஒருமுகப்படுத்தும்.chandrika-1
எனவே மக்களுக்கு அறிவிப்பதற்காக, நாங்கள் நேர்மையான உத்திகள், பொது பிரசங்கங்கள் என்பனவற்றை பின்பற்றி, சாத்தியமான தீர்வுக்கான ஒரே வழி, பேரம் பேசலுக்கான பேச்சு வார்த்தைக்கான பாதையை தேர்வு செய்வதுதான் என்றும், மற்றும் அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த ஒரு தேசம், மற்றும்; அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு அரசு, என்பனவற்றை கட்டியெழுப்புவதன் மூலம் சமாதானத்தை அணுகலாம் என்றும் தீர்மானித்தோம். 18 மாதங்களுக்குள் மூன்று பெரிய தேர்தல்களில், ஒவ்வொன்றிலும் அதிகப்படியான வாக்குகளுடன் வெற்றி பெற்றோம்.
1994ல் எனது அரசாங்கம் பதவிக்கு வந்தபோது நாங்கள் நடத்திய ஒரு மக்கள் கருத்தறியும் கணக்கெடுப்பின்படி, மோதலுக்கான பேச்சு வார்த்தை மூலமான தீர்வுக்கு 23 வீதமான சிங்கள மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தார்கள். சமாதானத்துக்கான செய்தி, மற்றும் சமூகங்களுக்கு இடையேயான பங்களிப்பு போன்ற விரிவான நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
கருத்தரங்குகள்,பயிற்சிப் பட்டறைகள் வீதி நாடகங்கள் போன்றவற்றை நடத்தியதுடன் ஊடகங்களையும் பரந்த அளவில் பயன் படுத்திக் கொண்டோம். 2 வருட முடிவில் மேற்கொண்ட மற்றொரு ஆய்வு மூலம் மக்கள் சமாதானத்துக்கு மட்டுமல்லாது, இந்த முறை, அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்களின் விகிதம் 68 விகிதமாக உயர்வடைந்திருந்தது.
எனது அரசாங்கம் ஜனநாயக வழிகளிலேயே பணியாற்றியது, எங்கள் விரோதிகளுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் பலவந்தமோ அல்லது வன்முறையையோ பிரயோகித்ததில்லை.
அரசாங்க தலைவர்களின் பார்வையும் செயற்பாடும் ஸ்ரீலங்கா மக்களின் தெரிவை வரையறுக்கும் கருவியாக இருந்தன.
சுதந்திரத்துக்கு பின்னான ஸ்ரீலங்காவின் வரலாற்றில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு எனது அரசாங்கம் ஒரு விரிவான தீர்வை சமர்ப்பித்திருந்தது. யுத்தத்தை முன்னெடுக்க வேண்டியிருந்த வேளைகளில் கூட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான முக்கியமான அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் ஆரம்பித்து அதனை முடித்தும் வைத்தோம், பல வருடங்களாக நடைபெற்ற போரினால் அழிவடைந்திருந்த உட்கட்டமைப்புகள்  யாவும் திருத்தியமைக்கப் பட்டிருந்தன - வீதிகள், பாலங்கள், வாய்க்கால்கள், நீர்ப்பாசன வேலைகள், தொலைத்தொடர்பு, மின்சாரம், பாடசாலைகள், மற்றும் பல்கலைக்கழகங்கள் மருத்துவ மனைகள் போன்றவை விரிவான மீள்கட்டமைப்பைக் கண்டன, மற்றும் விவசாயம், சிறு கைத்தொழில்கள், மற்றும் மீன்பிடி, போன்றவற்றுக்கு கடன்வசதிகள் கிடைப்பதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம்.
சந்தேகமில்லாமல் அதுவரை தங்கள் வளமான எதிர்காலத்துக்கான எந்த நம்பிக்கையையும் கொண்டிராத இளைஞர்களுக்கு இது உள்ளுரிலேயே வேலை வாய்ப்பை உருவாக்கியது. இதன் மூலம் நாங்கள், தமிழர்கள் உட்பட அனைத்து பிரஜைகளுக்கும் அபிவருத்தி நடவடிக்கைகளில், சம வாய்ப்பினை வழங்கும் நேர்மையான நோக்கத்துக்காகத்தான் ஸ்ரீலங்கா அரசாங்கங்கள் இருக்கின்றன என்பதை தமிழ் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட இயலுமாக இருந்தது. இந்தக் கொள்கைகளை நாங்கள் பின்பற்றத் தொடங்கியதும் எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையத் தொடங்கின என்று அனுபவ அடிப்படையிலான ஆதாரங்கள் வெளிப்படுத்தின.
எனினும், சகல மக்களும் தாங்கள் நியாயமாகவும் மற்றும் சமமாகவும் உள்ளடக்கப் பட்டிருக்கிறோம், என்று உணரும் ஒரு சமூகத்தை உருவாக்குவதை பொருளாதார முன்னேற்றங்களால் மட்டும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது, என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம். இதற்காக, சிங்கள மக்களாகிய நாங்கள், சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு; செயல்முறையில் மட்டுமன்றி, சட்டம் மற்றும் ஏனைய அநேக சட்டபூர்வமான அரசியல் சட்டவாக்கங்கள், மற்றும் விதிகள் மூலமாக மற்ற அனைவரையும் வரம்புகளுக்கு உட்படுத்தி பொறாமையுடன் பாதுகாத்து வந்த அரசியல் அதிகாரங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியம் எற்பட்டது.
அதனால் சிறுபான்மையினருக்கு அவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய பல்வேறு நடவடிக்கைகள் ஒன்றிணைந்த விரிவான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பொன்றை சட்டமாக்குவதை நாம் முன்மொழிந்தோம். இந்த உத்தேச வரைவு அரசியலமைப்பு, ஜனாதிபதிக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நடவடிக்கையையும் உள்ளடக்கியிருந்தது.
இந்த அரசியலமைப்பை சட்டமாக்கி, பிளவுபட்டுக் கிடக்கும் வன்முறை நிறைந்த ஸ்ரீலங்காவை, அமைதி; நிலவும் ஐக்கிய தேசமாக உருமாற்றும் எங்கள் கனவை, துரதிருஸ்டவசமாக மாற்றியமைக்க முடியவில்லை, ஏனெனில் இந்த சமாதான பிரேரணைகளை எல்.ரீ.ரீ.ஈ முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் நிராகரித்தது, அதேபோல பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஏற்படுத்தவதற்குத் தேவையான மிகச் சில வாக்குகளை அரசாங்கத்துக்கு அளிப்பதற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சிகளும் வீண் பிடிவாதம் செய்தன.
ஒரு பகிரப்பட்ட சமூகம் மற்றும் ஐக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக, இளைஞர்களுக்கு கற்பிப்பது முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம். 10,000 க்கும் மேற்பட்ட எங்கள் பாடசாலைகளில் ஒவ்வொன்றிலும் சமாதானக் கல்வியை வளர்த்தெடுப்பதற்காக, பாடசாலை பாடவிதானங்களில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தினோம், மற்றும் எங்கள் இளம் மாணவர்களுக்கு சக வாழ்வு, மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் அரசியல்,பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக உள்ள சம உரிமைகளைப்பற்றி போதித்தோம்.
வன்முறை, ஜனநாயக ஆட்சிக்கு தீவிரமான அழிவை ஏற்படுத்தும் என்பதை பயங்கரவாதிக்கு அவனுடைய பாஷையிலேயே பதிலளிக்கும் கொள்கையை நாங்கள் கடைப்பிடித்தோம். அந்த சமாதானம் என்கிற பாஷையை நாங்கள் பயன்படுத்தியிருந்தால், பயங்கரவாதி பலவீனம் அடைந்திருப்பான், சமாதானத்தைப் பற்றிய பிரசங்கம் மற்றும் நடவடிக்கைகளுக்கு திருப்தியான பதிலளிப்பதற்கு அவனது வன்முறை எனும் ஆயுதக்கிடங்கிலிருந்து ஆயுதங்கள் அவனுக்கு கிடைத்திருக்காது.
உண்மையில் இது சாதகமான விளைவுகளை நல்க ஆரம்பித்தது -
-யுத்த வலயங்களில் வாழ்ந்த தமிழ் பொதுசனங்களால், அபிவிருத்தி வேலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதை அனுமதிக்கும்படி எல்.ரீ.ரீ.ஈக்கு நிர்ப்பந்தம் வழங்கப்பட்டது.
-தமிழ் இளைஞர்கள் மாற்றீடானதும், சமாதானமுமான ஒரு எதிர்காலத்தைக் கண்டதினால் கிளர்ச்சியாளர்களின் படையில் இணைவதிலிருந்து விலகிச்செல்ல ஆரம்பித்தனர்.
-பயங்கரவாதம் மற்றும் தனிநாடு என்பதற்கு மாற்றீடு இல்லை என்று சொல்லிவந்த பயங்கரவாதிகளின் விவாதங்களில்,ஒரு மெதுவான ஆனால் தீர்க்கமான வெட்டிக் குறைப்பு இடம்பெறலாயிற்று. அரசாங்கம் வழங்கவிருந்த விரிவான அதிகாரப் பகிர்வு, அதேபோல உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் என்பன பயங்கரவாதத்துக்கு மாற்றீடான ஒரு அரசியலை வழங்கின. அவர்களின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன.
-இதில் எதிர்பாராத ஒரு திருப்பமாக இருந்தாலும், சாதகமான ஒரு வீழ்ச்சி ஒன்றிணைந்து உருவானது, அது 2004 சுனாமியால் ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தங்கள் ஆகும். முதற்தடவையாக சுனாமியால் பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களை மீள்கட்டுமானம் செய்யும் நடவடிக்கைகளில், அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றும் ஒரு மைல்கல்லான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு கிளர்ச்சியாளர்களை  அது இணங்க வைத்தது.
முடிவாக நான் வலியுறுத்த விரும்புவது, நாங்கள் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி நிலையான சமாதானத்தை நிறுவ வேண்டுமானால்,
நாங்கள் -ஒவ்வொரு மோதலினதும் மூலவேர்களைக் கண்டறியும் செயற்பாட்டில் திறமையுடன் ஈடுபட்டு,அவற்றைக் கையாளும் உத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
-பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கங்கள் சட்டபூர்வமான வழிகளில் பணியாற்ற வேண்டும்.
இது குறிப்பிடுவது சட்ட விதிகள் நிலவ வேண்டும், மேலும்; பின்லாடன் மற்றும் அவரது இஸ்லாமிச போர்க்குண சித்தாந்தமான சகிப்புத் தன்மையற்ற நிலை, மற்றும் பிரத்தியேக கடவுள்; கொள்கைகள் என்பனவற்றுக்கு மாறாக, அரசாங்கங்கள் திறந்த தாராண்மைவாத மற்றும் ஜனநாயக சமூகங்களை முன்னேற்ற வேண்டும் என்பதை.
-நாட்டிற்குள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக ஜனநாயக வழியில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் அத்தியாவசிய தேவையான கண்காணிப்புகள் என்பனவற்றை இது குறைக்கும்படி சொல்லவில்லை.
-தாராண்மைவாத முஸ்லிம் தலைவர்கள், சிந்தனாவாதிகள், மற்றும் அரசாங்கங்கள் என்பன பிரசங்கங்களை மேற்கொண்டு இஸ்லாமிச போராளிகளின் கோரிக்கைகளில் உள்ள சரி அற்ற நிலை மற்றும் முகம்மது நபியின் தத்துவம் தான் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமாதானமான ஒன்று, பண்டைய காலங்களில் இருந்தது போன்று முஸ்லிம் உம்மா எங்கும் பரவலாக இல்லை ,பின்லாடன் கூறியிருப்பதைப் போன்று முன்பிருந்த கலீபாக்கள் ஆன்மீக இராச்சியங்கள் இல்லை, ஆனால் தற்கால அரசியல் சக்திகள் மற்றும் அவர்களது உம்மாக்கள் என்பன  வகாபிசம் எனப்படும் இஸ்லாத்திள்;ள ஒரு போட்டியாளர்கள் பிரிவிலிருந்து வெளிப்பட்ட  நவீன புனரமைப்புக்கு பிந்தியவை. என்பதை புரிய வைக்கவேண்டும்.
அதன் காரணமாக பயங்கரவாத்துக்கு எதிரான போராட்டம் புதிய கட்டத்தை அடையும். புரிந்துணர்வு, ஏற்றுக்கொள்ளல், பிரசங்கம், மற்றும் பேச்சு வார்த்தை போன்ற ஆயுதங்கள்தான் போர்க்குணத்தின் ஆயுதத்ததை விட முதன்மையான ஆயுதங்களாக வேண்டும்.
நன்றி : ஏசியன் ட்ரிபியூன்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire