lundi 29 septembre 2014

காலை 7 மணி முதலே டிக்கட்டுக்களுக்காக அலை..நியு யோர்க் நகரில் பிரமாண்ட மேடையில் மோடி உரை

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் (Madison Square Garden) பிரமாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சுழலும் மேடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகின்றார்.
சுமார் 18 ஆயிரம் இந்திய- அமெரிக்கர்கள் இந்த மைதானத்தில் கூடியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்டமான திரைகளில் நரேந்திர மோடியின் உரை மொழிபெயர்ப்பு வாசகங்களுடன் காண்பிக்கப்படுகின்றது.
ஐநா பொதுச்சபை அமர்வில் இந்தியப் பிரதமர் சனிக்கிழமை உரையாற்றினார்.
மாடிஸன் சதுக்க மைதானத்தில் ராக் ஸ்டார்ஸ் என்று வர்ணிக்கப்படுகின்ற உலகப் பிரபலங்களுக்குரிய ஏற்பாடுகளுடன் நரேந்திர மோடியின் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எல்விஸ் பிரெஸ்லி, எல்டன் ஜான், முஹமது அலி போன்ற உலகப் பிரபலங்களின் நிகழ்வுகளே இதற்கு முன்னர் இந்த மைதானத்தில் நடந்துள்ளன.
இந்தியப் பிரதமரின் நிகழ்வு இங்கு முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதலே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வரிசைகளில் நின்று டிக்கட்டுக்களுக்காக அலைமோதியதாக நியு யோர்க்கில் உள்ள பிபிசி செய்தியாளர் பிரஜேஷ் உபத்யாய் தமிழோசையிடம் கூறினார்.
2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 10 ஆண்டுகளாக அமெரிக்கா வீசா அனுமதி மறுத்திருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுக்களை மோடி மறுத்திருந்தார்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவர் மீதான வீசாத் தடையை அமெரிக்கா தளர்த்தியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire