mercredi 3 septembre 2014

தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப்பு

mmஇலங்கையின் தேயிலை உற்பத்தியானது வரலாறு காணாதளவு அதிகரித்திருப்பதுடன், சீனா உள்ளிட்ட புதிய சந்தை வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
2013ஆம் ஆண்டு முதல் அரையாண்டு பகுதியுடன் ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டு முதல் அரையாண்டு பகுதியில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 7.5 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், இதனூடான வெளிநாட்டு வருமானம் 18 வீதத்தாலும், இலங்கை தேயிலைக்கான விலை 9.8 வீதத்தாலும் அதிகரித்திருப்பதுடன், தேயிலை உற்பத்தியானது 2 வீதத்தாலும் அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
தேயிலை மற்றும் இறப்பர் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உலக சந்தையின் கேள்விக்கு ஏற்ற வகையில் தரமுயர்ந்த தேயிலைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்காக தரம் குறைந்த தேயிலை உற்பத்திகளை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் தேயிலைக்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட புதிய சந்தை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.
தேயிலையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் தோட்டங்களிலிருந்து தேயிலைகளை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சின் ஊடாக உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட பயிர்ச்செய்கையாளர்களுக்கு 1300 ரூபா வீதம் 50 கிலோ கிராம் உரத்தை மானியவிலையில் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் 4500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. அரசாங்கம் எடுத்திருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாகவே இலங்கை தேயிலை வரலாற்றில் என்றுமில்லாதளவு உற்பத்தியை எட்ட முடிந்துள்ளது.
இறப்பர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இறப்பருக்கு நியாய விலையைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் நியாயவிலை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இறப்பர் உற்பத்தி விலையைவிட கூடுதல் விலைக்கே இறப்பர் கொள்வனவு செய்யப்படுகிறது. இருந்தபோதும் இறப்பர் உற்பத்தியாளர்கள் குறித்த துறையிலிருந்து வெளியேறாதிருக்க நியாயவிலை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் இறப்பர் உற்பத்தியில் 75 வீதமான இறப்பர் தேசிய உற்பத்தி சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. 25 வீதமான இறப்பர் பால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இறப்பர் பொருள் உற்பத்திக்காக 10 வீதத்துக்கும் குறைவான இறப்பர் பாலே வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. இறப்பர் பால் இறக்குமதி செய்யப்படுவதாலேயே இலங்கையில் இறப்பரின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வெறுமனே அரசியல் நோக்கத்திலான குற்றச்சாட்டுக்களே.
உலக சந்தையில் இறப்பரை கொள்வனவு செய்யும் நாடுகளில் கேள்வி குறைந்திருப்பதும் இறப்பரின் விலை வீழ்ச்சியடையக் காரணமாகியுள்ளது.
அது மட்டுமன்றி இறப்பர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் நாம் புதிதாக இறப்பர் மரங்களை நாட்டியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் புதிய இறப்பர் செய்கையை ஆரம்பித்துள்ளோம். எப்.ஏ.ஓ அமைப்பின் கடனுதவியுடன் மொனராகலை மாவட்டத்தில் புதிதாக 9500 இறப்பர் உற்தியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். சுமார் 5500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இறப்பர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  

Aucun commentaire:

Enregistrer un commentaire