jeudi 18 septembre 2014

இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கிறது சீனா

இலங்கையில் 140 கோடி டாலர்கள் (சுமார் ரூ.8,500 கோடி) முதலீட்டில் துறைமுக நகரம் ஒன்றை சீனா அமைக்கிறது.
இலங்கையில், மேற்கொள்ளப்படும் மிக அதிக அளவிலான நேரடி அன்னிய முதலீடு இதுவாகும்.
இலங்கை தலைநகர் கொழும்புக்கு அருகில், கடலில் செயற்கையாக அமைக்கப்படும் தீவு ஒன்றில் இந்த துறைமுக நகரம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளை சீன அதிபர் ஜீ ஜின்பிங் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த துறைமுகம் உலகம் முழுவதுமிலிருந்து 500 கோடி டாலர்களை (ரூ.30,400 கோடி) ஈர்க்கக்கூடியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
583 ஏக்கர் பரப்பளவில் அமையும் இந்தத் துறைமுகம், ஆயிரக்கணக்கோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

"எந்தச் சூழலிலும் நண்பன்': முன்னதாக, இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் சமால் ராஜபட்சேவை சந்தித்த ஜீ ஜின்பிங், ""எந்தச் சூழலிலும் சீனாவுக்கு ஆதரவளிக்கும் நட்பு நாடு இலங்கை'' என்று கூறினார்.
தைவான், திபெத் ஆகிய விவகாரங்களில் சீனாவுக்கு இலங்கை அளித்து வரும் ஆதரவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பாதுகாப்பு, கடல் கண்காணிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களை அவர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வருவதற்கு முன்பாக, அவர் செவ்வாய், புதன்கிழமைகளில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire