jeudi 1 novembre 2012

தமிழில் நீதித்துறை செயற்பாடுகள் : வாசுதேவ


தமிழ் கைதிகள் தமது நீதித்துறை செயற்பாடுகளின்போது முகங்கொடுக்கும் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கப்போவதாகவும் விசாரணைகளை தமிழில் நடத்தப்போவதாகவும் குற்றப்பத்திரிகைகளை தமிழில் தயாரிக்கப்போவதாகவும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகளை நேற்று புதன்கிழமை பார்வையிட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தமது வழக்குகள் தொடர்பாக நீதித்துறை செயன்முறைகள் தனி சிங்களத்தில் காணப்படுவதால், தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக தமிழ்க் கைதிகள் சுட்டிக்காட்டினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்த தமிழ் சந்தேகநபர்களின் நீதிமன்ற செயன்முறையில் ஒரு புதிய ஒழுங்குகளைக் கொண்டுவர விசேட நீதிமன்றங்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் 359பேர் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கடந்த மே மாதம் அறிவித்திருந்தது. இவர்களில், 309பேரின் வழக்குகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அரசாங்கம் அதன்போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire