ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்ட போதிலும் – இலங்கையின் மனித உரிமைகள் நிலை மோசமாகவே இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மனித உரிமைகளை மேம்படுத்தவும், மனித உரிமை தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றவும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் மனித உரிமை நிலை மீளாய்வு செய்யப்பட்டபோது போர் உச்சகட்டத்தில் இருந்தது.
அந்தப் போரின் போது இலங்கை இராணுவம் போர் குற்றங்களைப் புரிந்ததகாக் கூறப்படுவது தொடர்பாகவும், போரின் போது பலர் ஒரே சமயம் கொல்லப்பட்டது உட்பட இதுவரை விசாரிக்கப்படாத பல அத்துமீறல்கள் தொடர்பாகவும் இலங்கை அரசு முன்னேற்றங்களைக் காணவில்லை என்று ஹூமன் ரைட்ஸ் வாட்ச், அம்னெஸ்ட்டி போன்ற அமைப்புக்கள் கூறுகின்றன.
போர் முடிந்த பிறகு கூட அரசு சித்திரவதையை கைகொள்வதாகவும், ஆட்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு காணமல் போவது தொடர்வதாகவும், பத்திரிகையாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் தொடர்ந்து சந்திப்பதாகவும் இந்த அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
நம்பிக்கை
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உட்பட பல அதிகாரங்கள் தற்போது ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது நிலைமையை மோசமாக்குவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஜெனிவாவில் இந்த மீளாய்வுக் கூட்டம் துவங்கும் முன்பு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், போரின் முடிவில் ஒரு லட்சத்து ஐப்பதாயிரம் பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று தான் கூறிய முந்தைய எண்ணிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கை அரசோ எட்டாயிரத்துக்கும் குறைவானவர்களே போரின் இறுதி கால கட்டத்தில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
தனக்கு எதிராக கூறப்படும் மனித உரிமை மீறல்களை தாம் எதிர்கொண்டு வருவதாகக் கூறும் இலங்கை அரசு, ஆயிரக்கணக்கான முன்னாள் புலிகளுக்கு மறு வாழ்வு அளித்தமை தொடர்பாக அரசுக்கு மேலும் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.
அதேநேரம் இம்முறை தாம் அதிக நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை இலங்கை சூழல் குறித்து மூன்றரை மணி நேர விவாதம் நடக்கும்.
அதன் பிறகு இந்தியா, ஸ்பெயின் மற்றும் பெனின் நாடுகள் ஒரு அறிக்கையை தயாரித்து அதை மனித உரிமை கவுன்சிலில் அளிக்கும்.
மனித உரிமை பேரவையின் பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் பிற உறுப்பு நாடுகளைப் போல இந்த அறிக்கையை இலங்கையும் அமல்படுத்தியாக வேண்டியிருக்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire