lundi 5 novembre 2012

போர்குற்றங்களை அம்பலப்படுத்திய, முக்கியமான நபர்களில் ஒருவரான சண்டே லீடர் ஊடகத்தின் ஆசிரியர் பிரற்றிக்கா ஜோன்ஸ்

இலங்கை இராணுவத்தின் போர்குற்றங்களை அம்பலப்படுத்திய, முக்கியமான நபர்களில் ஒருவரான சண்டே லீடர் ஊடகத்தின் ஆசிரியர் பிரற்றிக்கா ஜோன்ஸ் ஆவார். வெள்ளைக்கொடி விவகாரம் முதல், கோத்தபாய மனைவிக்கு நாய் குட்டி இறக்குமதி வரை பல செய்திகளை அவர் எழுதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோத்தபாய, இவரைத் தொலைபேசிவாயிலாகத் தொடர்புகொண்டு மிரட்டியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். அவர் திட்டிய வார்த்தைகளையும், அப்படியே துணிச்சலாக செய்தியாக வெளியிட்டவர் பிரற்றிக்கா ஆவார். ஆனால் அவரை சண்டே லீடர் ஊடகம் பணி நீக்கம் செய்தது. தொடர்ந்து கோத்தபாயவின் கைக்கூலிகள் அவரை மிரட்டியும் வந்தனர். இந் நிலையில் கோத்தபாய பிரற்றிக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்துவரும் நீதிபதி, கோத்தபாயவுக்கு வேண்டப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அடுத்து நடக்கவிருக்கும் வழக்கில் பிரற்றிக்காவின் பாஸ்போட்டை முடக்கி அவரை நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருந்தது. வழக்கில் கோத்தபாய வெல்லும் பட்சத்தில் பிரற்றிக்காவுக்கு சிறைத்தண்டனை கிடைக்கவேண்டும் என நீதிபதியிடம் கோத்தபாய தெரிவித்துள்ளார். இவ்விடையங்களை எப்படியோ மோப்பம் பிடித்த பிரற்றிக்கா, மேற்குலக நாடு ஒன்றின் உதவியுடன் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார் . இலங்கையில் மனித உரிமை பேணப்படவேண்டும் என்றும், போர்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அடிக்கடி குரல்கொடுத்துவரும் ஒரு நாடே மேற்கண்டவாறு பிரற்றிக்கா தப்ப முழு உதவிகளையும் செய்துள்ளது.

குறிப்பாக தமது நாட்டுத் தூதுவராலயத்தில், அவரைத் தங்கவைத்து. பின்னர் தமது வாகனத்தில் அவரை ஏற்றி விமானநிலையம் கொண்டுசென்று அங்கிருந்து தமது நாட்டிற்கு அவரை அனுப்பிவைத்துள்ளது ஒரு மேற்குலக நாடு. தற்போது தாம் பாதுகாப்பாக இருப்பதாக பிரற்றிக்கா ஜோன்ஸ், ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளது. இனி கோத்தபாயவின் பாடு கொண்டாட்டம் தான். இறுதியாக அவரைப் பற்றி எழுதிவந்த ஊடகவியலாளரையும் அவர் நாட்டை விட்டுத் துரத்திவிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire