mercredi 4 juin 2014

அயர்லாந்தில் 800 இறந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள்

அயர்லாந்தில் 800 இறந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள் ஒரு கழிவு நீர்த் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி அயர்லாந்து அரசு விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.
திருமணமாகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்காக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினால் நடத்தப்பட்டு வந்த ''சேவை இல்லம்'' ஒன்றில் இருந்த கழிவு நீர்த் தொட்டியில் இந்த உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பிறந்து இரண்டு நாட்கள் முதல் ஒன்பது ஆண்டுகள் வரை வயதான குழந்தைகள் 1925க்கும் 1961ம் ஆண்டுக்கும் இடையேயான கால கட்டத்தில் இறந்தன.
வாழ்க்கையில் "வழுக்கி விழுந்த" பெண்கள் என்று வர்ணிக்கப்பட்ட பெண்களுக்காகவென்று, அயர்லாந்தின் டுவாம் நகரில் இந்த இல்லம் கன்னிகாஸ்தீர்களால் நடத்தப்பட்டுவந்தது.
இந்த இடம் முதலில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது இந்த குழந்தைகளின் உடல் எச்சங்கள் அயர்லாந்தில் 1840களில் நிலவிய பஞ்சத்தில் பலியான குழந்தைகளின் உடல்கள் என்று முதலில் நம்பப்பட்டது.
ஆனால் உள்ளூர் வரலாற்றாய்வாளரான கேதரின் கோர்லெஸ் இந்த நகரின் மரணம் மற்றும் நல்லடக்கம் குறித்த ஆவணங்கள் ஒத்துப் போகவில்லை என்று கண்டுபிடித்தார்.
இந்த இறந்த குழந்தைகளுக்கு நிரந்தரமான ஒரு நினைவிடம் கட்டுவதற்கு நிதி திரட்டப்பட்டுவருகிறது. bbc

Aucun commentaire:

Enregistrer un commentaire