mercredi 25 juin 2014

மட்டக்களப்பு குருக்கள்மடம் கடலோரப் பகுதியில் புதைகுழிகள் தோண்ட நீதிமன்றம் உத்தரவு

muslimkilllingsகாணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு குருக்கள்மடம் கடலோரப் பகுதியில் ( ஆவணப்படம்)
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில், விடுதலைப்புலிகளால்,1990ம் ஆண்டில், கடத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தோண்டுமாறு களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் 1990ல் முறிந்து மீண்டும் போர் ஆரம்பமானபோது விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில், 1990ம் ஆண்டு ஜுன் மாதம் மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் பயணம் செய்த குறிப்பாக காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் 165 பேர் குருக்கள்மடம் என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளினால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கடலோரப்பகுதியில் புதைக்கப்பட்டதாக முஸ்லீம்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
படுகொலை செய்யப்பபட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் சிலர் அண்மையில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடுகளை செய்துள்ளார்கள்.
காத்தான்குடி நகர சபை உறுப்பினரான மஜீத் ஏ . றவூப் தனது உறவினர்கள் இருவர் தொடர்பாக செய்த முறைப்பாடு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
தமது உறவினர்கள் இருவர் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடங்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என மஜீத் ஏ . றவூப் பொலிஸ் விசாரனையின் தான் தெரிவித்தாகக் கூறுகின்றார்.
சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவரால் அடையாளம் காட்டப்பட்ட கடலோரப் பகுதியில் தற்போது பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோகன குறிப்பிடுகின்றார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அமர்வின் போதும் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பலரும் இது தொடர்பாக சாட்சியமளித்திருந்தார்கள்..
சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்க முறைப்படி அடக்கம் செய்ய ஆணைக்குழு உதவ வேண்டும் என அந்த அமர்வின்போது சாட்சியமளித்தவர்கள் கோரினர்.
இதனையடுத்து இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடலோரப் பகுதியை ஆணைக்குழு தலைவர் உட்படபிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire