samedi 28 juin 2014

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மைனாரிட்டிகள் மீது நடக்கும் கலவரங்கள் – இயக்குவது யார்?

– எஸ்.ஜே. இதயா
இலங்கையில் ‘பொதுபல சேனா’ என்றொரு பௌத்த அமைப்பு, தனது செயல்பாடுகளால் அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இந்த அமைப்புக்கு ராஜபக்ஷ அரசின் மறைமுகமான ஆதரவு இருப்பதாக இலங்கையின் எதிர்க் கட்சிகள் அடிக்கடி குற்றம்சாட்டி வருகின்றன. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மைனாரிட்டிகள் மீது இந்த அமைப்பு அடிக்கடி மோதும் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
கடந்த வாரம் இந்த அமைப்பு சில முஸ்லிம் கடைகளையும், தொழில் நிறுவனங்களையும் தாக்கியது. இந்தக் கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அச்சமயம் வெளிநாட்டிலிருந்த ராஜபக்ஷ, இதற்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனால், இலங்கையில் இதை யாரும் நம்புவதாக இல்லை.
இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள், தமிழ் பேசும் இந்திய வம்சாவழி முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பாலும் தொழில் செய்வதால், சிங்களர்களோடு இணக்கமாகச் செல்வதையே விரும்புவார்கள். ஆனால், சமீப சில ஆண்டுகளாகப் ‘பொதுபல சேனா’ அமைப்பு, முஸ்லிம்களைக் குறி வைத்துக் கலவரங்களை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. “ராஜபக்ஷ அரசு நினைத்தால், இந்த அமைப்பைத் தடை செய்யவோ, கட்டுப்பாட்டில் வைக்கவோ முடியும். ஆனால், செய்ய மறுக்கிறார். காரணம் – அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷதான். அவர் இந்த அமைப்பை மறைமுகமாக இயக்கி வருகிறார்” என்று குற்றம் சாட்டுகின்றன முஸ்லிம் அமைப்புகள்.
இதனிடையே ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகள் போலியான பாஸ்போர்டுகள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவி வருவதாக இன்டர்போல் உளவுப் பிரிவு, இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பில் கூட, இலங்கை தீவிரவாத தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியானது நினைவில் இருக்கலாம். விடுதலைப் புலிகளை ஒடுக்கிய இலங்கை அரசுக்கு, ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்த சவாலாக அமையக் கூடும் என்று பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். இது போன்ற தருணத்தில், பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களைக் குறி வைத்துத் தாக்குவது, இலங்கையில் தீவிரவாதம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்து விடக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சில செய்தியாளர்கள். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நாடு கடந்த தமிழீழ அமைச்சர் வரவேற்றுள்ளார். இலங்கை ராணுவத்தின் கடுமையான போர் நடவடிக்கைகளால் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தமிழீழம் இனி சாத்தியமில்லை என்ற நிலை 2009-ல் உருவாக்கப்பட்டு விட்டது. எனினும், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலி அமைப்பினர், ‘நாடு கடந்த தமிழீழம்’ என்றொரு மாயையான (Virtual) தமிழீழத்தை உருவாக்கி ஆட்சி செய்து வருகின்றனர். அமெரிக்காவில் வாழும் ருத்திர குமார் என்பவர், இந்தத் தமிழீழத்தின் பிரதமராக ஆட்சி செய்து வருகிறார். உள்நாட்டு அபிவிருத்தி அமைச்சர் என்ற பொறுப்பை முருகதாஸ் என்பவர் வகித்து வருகிறார். வெளிநாட்டில் இருந்தபடியே தமிழீழத்தின் உள்நாட்டு அபிவிருத்தியைக் கவனித்து வரும் இவர், மோடியின் அமெரிக்க வருகையை வரவேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளார். “ருத்திர குமாரிடம் இருக்கும் பாஸ்போர்ட்டை வைத்து, அவர் இந்தியா செல்லும் வாய்ப்பில்லை. நரேந்திர மோடிக்கு இதுவரை அமெரிக்கா விஸா வழங்காமல் இருந்தது. இதனால், ஆசியப் பிராந்தியத்தின் இந்த இரு முக்கியப் பிரதமர்களும் சந்திக்க வாய்ப்பில்லாமல் இருந்தது. தற்போது மோடி அமெரிக்கா வர இருப்பதால், இந்தியப் பிரதமரும், தமிழீழ பிரதமரும் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் மோடி, இந்த நாடு கடந்த தமிழீழப் பிரதமரைச் சந்திக்கப் போகிறாரா, இல்லையா என்பது அவர் அமெரிக்கா செல்லும்போதுதான் உறுதியாகும்.         நன்றி: துக்ளக்

Aucun commentaire:

Enregistrer un commentaire