mercredi 18 juin 2014

தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு:காத்தன் குடியில் பேரணி;inioru

kaathaanku_protast_005காத்தான்குடியில் இன்று பாரிய கண்டனப் பேரணி ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது.
இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொது பல சேனா பயங்கரவாதிகளின் முஸ்லீம் தமிழ்த்  தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பைக் கண்டித்து இப்பேரணி நடத்தப்பட்டது.
கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது.
இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர், பாதுகாப்பு அமைச்சரே பொது பல சேனாவை உடனடியாக தடை செய், சிறு பான்மை மக்களை பாதுகாப்பது மஹிந்த சிந்தனையல்லவா?, இனவாதிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்து, பாதுகாப்பு செயலாளரே சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்பு தா?, இனவாதிகளை கைது செய், அரசே மத வன்முறையை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு தமிழ், சிங்கள, ஆங்கில பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட அதன் உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் ஹாரூன், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா ஆகியவற்றின் பிரதிநிதிகள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
பேரணியின் இறுதியில் பொது பல சேனா அமைப்பை தடை செய்ய கோரி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மியதுல் உலமா சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்புவதற்கான மஹஜர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரீ.எம்.காலித் ஜேபி, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ஆகியோரினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடம் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக வைத்து கையளிக்கப்பட்டது. இப் பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயளிலிருந்து ஆரம்பமாகி காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றது.       

Aucun commentaire:

Enregistrer un commentaire