mercredi 11 juin 2014

இந்தியா, கடலடி ஏவுகணை.பிரிட்டிஷ் டிஃபென்ஸ் மீடியா ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்தியா, கடலடி ஏவுகணை ஒன்றை ரகசியமாக ஏவி பரீட்சித்து பார்த்தது என்ற தகவலை பிரிட்டிஷ் டிஃபென்ஸ் மீடியா ஒன்று வெளியிட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக புதுடில்லி தகவல் எதையும் வெளியிடவில்லை.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலஸ்டிக் ஏவுகணையே, இந்திய கடற்படையால் ஏவப்பட்டதாக தெரிகிறது. இவ்வகை ஏவுகணையை SLBM (ரக ஏவுகணை) என்பார்கள். இந்திய கடற்படையின் கடலடி ஏவு தளம் (கடலுக்கடியில் துப்பாக்கி சூடு தளம்) ஒன்றில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, கடலடியே 3,000 கி.மீ. தொலைவுள்ள இலக்கு ஒன்றை நோக்கி ஏவப்பட்டதாக தெரியவருகிறது.
இந்தியாவின் கிழக்கு கரையில் இந்த கடலடி ஏவு தளம் உள்ளதாகவும், இங்கிருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் இலக்கு தெற்கு இந்தியக் கடலில் இருந்ததாகவும், பிரிட்டிஷ் மீடியா சொல்கிறது.
ஏவல் சோதனை வெற்றிகரமாக நடந்தது எனவும் கூறப்படுகிறது.
மத்தியில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ.க. அரசு முன்பு ஆட்சியில் இருந்தபோது 1998 - ல், பொக்ரான்-II ரகசிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு, உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அப்போதிருந்த பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் உத்தரவின்பேரில் 1998 - ம் ஆண்டு மே மாதம் 11 - ம் தேதி, பொக்ரான்-II, 'ஆபரேஷன் சக்தி' (ஆபரேஷன் சக்தி) என்ற பெயரில், ரகசிய நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது. அந்த ரகசிய நடவடிக்கை நடக்கப் போவதை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. கூட தெரிந்து கொண்டிருக்கவில்லை என்ற தகவல் பின்னர் வெளியானது.
தற்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மீண்டும் அதுபோன்ற நடவடிக்கைகள் எதிலும் இந்தியா ஈடுபடலாம் என்ற சந்தேகம் மேலை நாடுகளுக்கு உள்ளது.
இப்படியான நிலையில், இந்தியா கடலடி ஏவுகணை ஒன்றை ரகசியமாக ஏவி பரீட்சித்து பார்த்தது என்ற தகவலை பிரிட்டிஷ் டிஃபென்ஸ் மீடியா ஒன்று வெளியிட்டிருப்பது, மேலை நாடுகள் இந்தியாவை சுற்றி ராணுவ ரீதியில் என்ன நடக்கிறது என்பதில் கண் வைத்திருக்கின்றன என்பதை உறுதி செய்கிறது.
பிரிட்டிஷ் மீடியாவின் தகவலின்படி, தற்போது இந்தியா ஏவிப் பரீட்சித்த ஏவுகணை K-4 ரகத்திலானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் புதிய நீண்டதூர கடலடி ஏவுகணை.
இதற்குமுன் இந்தியக் கடற்படையிடம் இருந்த கடலடி ஏவுகணை K-15 (இதை பி 05 என்றும் சொல்வார்கள்), வெறும் 750 கி.மீ. தொலைவுக்கே கடலடியே ஏவப்படக் கூடியதாக இருந்தது. தற்போது வெளியான தகவலின்படி, புதிய K-4 கடலடி ஏவுகணை, 3,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கும் திறன் வாய்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஏவுகணை திட்டத்தின் முன்னோடியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமின் பெயரின் முதல் எழுத்தான கே என்பதை குறிக்கும் வகையிலேயே இந்தியாவின் கே சீரீஸ் ஏவுகணைகள் பெயரிடப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

Aucun commentaire:

Enregistrer un commentaire