dimanche 15 juin 2014

சுனி கைப்பற்றிய பல நகரங்கள் மீண்டும் அரச படை வசம் இராக்கில்

இராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்காக முன்னேறிவந்த சுனி கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டு தடுத்துவரும் அரச படைகளும் ஷியா ஆயுதக்குழுக்களும் பல நகரங்களை மீளக்கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் திக்ரித் மற்றும் மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இன்னும் சுனி கிளர்ச்சியாளர்கள் வசமே உள்ளன.தலைநகருக்கு வட-கிழக்காக நடந்துள்ள மோதலில் அரச படை ஹெலிகாப்டர் ஒன்று 7 குர்தீஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்திக் கொன்றுள்ளது.
முன்னதாக, சுனி கிளர்ச்சியாளர்கள் கைவிட்டுச் சென்றிருந்த மையங்களில் இந்த குர்தீஷ் போராளிகள் நிலைகொண்டிருந்தனர்.
குர்தீஷ் போராளிகள் மீதான தாக்குதல் தவறுதலாக நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, இராக் தலைவர்கள் தமக்கிடையிலான கருத்துமுரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயற்பட்டாலே இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் உதவிகள் வெற்றியளிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி முன்னதாக எச்சரித்திருந்தார்.
இராக்கில் மோசமடைந்துவரும் மோதல் வன்முறைகள் காரணமாக அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை வளைகுடாப் பகுதியில் மீள நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.bbc

Aucun commentaire:

Enregistrer un commentaire