lundi 11 novembre 2013

பொது நலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் இலங்கையில் தடம் பதிக்கும் ;எச்சரிக்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

பொது நலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் இலங்கையில் தடம் பதிக்கும் நிலைமை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தியாவில் அடுத்த வருடம் தேர்தல் முடிந்தவுடன் இலங்கை தமிழர்கள் மீதான தமிழக அரசியல்வாதிகளின் பாசம் காற்றில் பறந்து போய் விடுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் இலங்கை தமிழர்கள் மீது தமிழ் நாட்டு தமிழ் மக்கள் வைத்துள்ள உணர்வு பூர்வமான ஆதரவை தமது பக்கம் திருப்பிக் கொண்டு அம் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தமிழக அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை தமிழ் மக்கள் மீது பாச மழையை பொழிகின்றனர்.
இதற்காகவே பொது நலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக் கூடாதென்றும் போராட்டங்களை நடத்துகின்றனர்.
இதன் மூலம் தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவின் தமிழ் நாட்டை தவிர ஏனைய மாநிலங்கள் பாரதீய ஜனதா கட்சி உட்பட அதன் பிரதமர் வேட்பாளர் மோடியும் பிரதமர் சிங் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் ராஜதந்திர உறவுகளை பேண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் இலங்கைக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. நஷ்டத்தை எதிர் நோக்கப் போவது இந்தியாவே ஆகும்.
இந்த பிரச்சினையை மாநாட்டில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இலங்கையில் பாகிஸ்தான் தடம் பதிக்கும் நிலைமை உருவாகும்.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் அதனை பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் சாட்சியங்களுடன் அதற்கான பொறுப்புக் கூறும் தகவல்களுடன் வெளியிட வேண்டும்.
அதன் போது அது தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும். பொது நலவாய நாடுகள் அமைப்பிலுள்ள அங்கத்துவ நாடுகள் தத்தமது நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை மாநாட்டில் முன் வைக்க முடியாது. இது தான் அமைப்பின் சட்டமாகும்.
இம் மாநாட்டில் அங்கத்துவ நாடுகளுக்கு இடையேயான நட்புறவுகள் சமாதான முன் நகர்வுகள் பொருளாதார நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுக்க முடியுமென்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire