vendredi 29 novembre 2013

போராடி உயிர் நீத்த பிரபாகரன் என்றல்லவா பேசி தொலைத்திருக்கிறார் அந்த ஸ்ரீதரன் எம்.பி.!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என தமது கட்சி எம்.பி. கூறியது அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து அல்ல” என்று தெரிவித்துள்ளார், இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
விடுதலைப் புலிகள் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அக்கட்சியின் தலைவராக அப்போது இருந்தவரும் இதே இரா.சம்பந்தன்தான். இலங்கையில் யுத்தம் முடிந்தபின் தேர்தல் காலங்களில் மட்டும் விடுதலைப் புலிகளை சிலாகிப்பது இக் கட்சியின் சமீபகால வழக்கம்.
இந்த நிலையில், சமீபத்தில் இக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், “எமது கட்சி எம்.பி., பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு உணர்ச்சி வசப்பட்டு கருத்து வெளியிட்டிருக்கக் கூடும். ஆனால், எமது கட்சியின் நிலைப்பாடு அதுவல்ல.
கடந்த காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படியான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை (அடேங்கப்பா!).
எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படியான கருத்தை தெரிவிக்கப்போகிறார் என்று முன்கூட்டியே எமக்கு தெரியவந்திருந்தால், இப்படியான கருத்துக்களை வெளியிட அனுமதித்திருக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னங்க இது?
தமிழகத்தில் பழ.நெடுமாறன் நேற்று, “அடுத்த யுத்தத்துக்கு தலைமை தாங்க வருகிறார் பிரபாகரன்” என்கிறார்.
இலங்கையில் பெரிய தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று, “தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரன் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர்” என்பது எமது கட்சியின் கருத்து அல்ல” என்கிறார்.
பழ.நெடுமாறன் அய்யாவுக்கு இந்த விவகாரத்தில் உள்ள பெரிய சிக்கல் என்ன தெரியுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் அதற்காக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதந்திர போராட்ட வீரர் என்று சொன்ன அக்கட்சியின் ஸ்ரீதரன் எம்.பி.க்கு பாராட்டு தெரிவிக்க முடியாது.
“போராடி உயிர் நீத்த பிரபாகரன்” என்றல்லவா பேசி தொலைத்திருக்கிறார் அந்த ஸ்ரீதரன் எம்.பி.!
இதைத்தான் ஆங்கிலத்தில் Triangle Trouble (முக்கோண சிக்கல்) என்பார்கள்! ஒரு காலத்தில் எப்படி இருந்த இயக்கமுங்க அது… ஹூம்!

Aucun commentaire:

Enregistrer un commentaire