mardi 19 novembre 2013

சீனா திடீர் வலியுறுத்தல்,இலங்கைப் போரில் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை அதன் நட்பு நாடான சீனா திடீரென்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கைப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்திய நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சீனா உறுப்பு நாடாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தெடுக்கப்பட்டுள்ளதால் சீனாவின் நிலைப்பாடு மாறியுள்ளதாக தெரிகிறது.
"இலங்கைப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சர்வதேச விசாரணைக்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கின் கெங் கூறியதாவது:
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மற்ற நாடுகள் ஒருங்கிணைந்து உதவ வேண்டும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது குறித்து அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒற்றுமையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து என்று கின் கெங் கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமைகளை மீறிய இலங்கையை கண்டிக்கக் கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக சீனா வாக்களித்தது. அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
இலங்கை போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்மானம் கொண்டு வந்தால், ஆணையத்தில் உறுப்பு நாடான சீனா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகளையும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் சீனா நிறைவேற்றி தந்தது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire