mercredi 27 novembre 2013

தமிழ்த் தலைவர்களையும் தமிழ் மக்களையும் கொலை செய்த பிரபாகரனை விடுதலைப் போராளியென சித்தரிக்க வேண்டாம்!

அரசியல் நோக்கில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படவில்லை. 109 வருடங்களின் பின்னர் ஜனநாயகத்தை அனுபவிக்கும் அவகாசத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

தமிழ் தலைவர்களையும் வட பகுதி மக்களையும் கொலைசெய்த பிரபாகரனை சுதந்திர போராளி என்று விபரிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதையே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது :- பிரபாகரனை சுதந்திர போராளி எனவும் வீரர் எனவும் குறிப்பிட்ட ஸ்ரீதரன் எம். பி., பிரபாகரன் பயங்கர வாதியல்ல என்றும் சபையில் கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் இவ்வாறு கூறுவதன் மூலம் வடக்கில் ஏன் இன்னும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சரியான பதில் கிடைக்கும். தமிழ் தலைவர்களை கொலைசெய்த ஒருவரை ஸ்ரீதரன் எம்.பி. தேசிய தலைவராக விபரிக்கிறார். இந்த நிலையில் வடக்கில் இராணுவத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.
வடக்கில் மீள்குடியேற்றமோ எதுவித அபிவிருத்தியோ இடம்பெறவில்லை என்று ஸ்ரீதரன் எம்.பி. வாய்கூசாமல் கூறுவதை ஏற்க முடியாது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மக்கள் எங்கே என அவர் கேள்வி எழுப்பினார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை பிரபாகரன் தடுத்து நிறுத்த முற்பட்டார். அதனையும் மீறிச் சென்றவர்களை பிரபாகரனின் ஆட்கள் சுட்டனர். பிரபாகரனின் சகாக்களின் துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்பிய இளைஞர் ஒருவரே பிரபாகரன் இருக்குமிடத்தை கூறினார்.
வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை சுட்டுக்கொன்றது குறித்து பிரபாகரனிடமே கேட்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாண சபை 6 மாதங்களே இயங்கியது. மாகாண சபை முறையை பிரபாகரன் எதிர்த்தார். பிரேமதாஸ புலிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து போசித்தார்.
1905 முதல் 109 வருடங்களாக மக்கள் பெற்றிராத ஜனநாயகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயிலான எமது அரசாங்கமே வழங்கியது. வட பகுதி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பர் என்று தெரிந்தும் வட மாகாண சபைத் தேர்தலை நாம் நடத்தினோம். ஒரு கள்ள வாக்காவது இத்தேர்தலில் இடப்படவில்லை.
வட பகுதி மக்களின் நகை நட்டுக்களை பிரபாகரன் பறித்துச் செல்லவில்லையா? கப்பம் பெறவில்லையா? சிறுபிள்ளைகளை கடத்தி படையில் இணைக்கவில்லையா? இவரைத் தானா சுதந்திரத்திற்கான போராளி என்கிaர்கள்.
109 வருடங்களின் பின்னர் வட பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை அனுபவிக்க சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்ததை மறந்து பேசாதீர்கள்.
பல்கலைக்கழக மாணவர்களை பிரபாகரன் கடத்திச் சென்று கொன்றார். புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் வட பகுதி மாணவர்களுக்கு நன்மை ஏற்படவில்லையா? இதற்கு இராணுவமே பங்களித்தது.
நாம் அனைவரும் இலங்கையர் என்பதை உணர்ந்து செயற்பட பழக வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் நிலை உருவாக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம். எனவே இனவாதத்தை தூண்ட வேண்டாமென கோருகிறேன்.
கிளிநொச்சியில் சிங்கள பாடசாலையொன்று முன்னர் இருந்தது. அங்கிருந்த சிங்கள மக்கள் மீள கிளிநொச்சிக்கு செல்லவில்லை.
எனவே சர்வதேச சமூகத்துக்காக தவறான பிரசாரம் செய்யாதீர்கள்.
வடக்கில் மக்களின் சனத்தொகை பெருமளவு குறைந்தது. இன விகிதாசார அடிப்படையிலே பல்கலைக்கழக கோட்டா வழங்கப்படுகிறது. சனத்தொகை கணிப்பீட்டின் மூலம் வடக்கில் சனத்தொகை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழக கோட்டாவும் குறைந்தது. எதிர்காலத்தில் வடக்கில் பாராளுமன்ற தெரிவும் குறைவடையும். அரசியல் நோக்கத்தில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாவது குறைக்கப் படவில்லை. நாம் இனவாத ரீதியில் செயற்பட்டால் யாழ். பல்கலைக் கழகத்தையோ கிழக்கு பல்கலைக்கழகத்தை யோ முன்னேற்றியிருக்க மாட்டோம்.
பிரேமதாஸ, லலித் அதுலத் முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்களை புலிகள் கொன்றதைப் பற்றி இல்லாமல் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களை கொன்றதைப் பற்றியே பேசுகிறோம்.
எனவே, வட பகுதி தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று கோருகிறேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரேஇனமாக ஒற்றுமையாக வாழ்வதையே ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கம் விரும்புகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire