mercredi 6 novembre 2013

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக விசாரணைகளை நடத்துவதைத் தட்டிக்கழித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சம்பந்தன் எச்சரிக்கை

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக விசாரணைகளை நடத்துவதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை சிறிலங்கா அரசு சந்திக்க நேரிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“இசைப்பிரியா படுகொலை தொடர்பாக சனல்-4 வெளியிட்ட காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று அதனை பார்த்த அனைவரும் கூறுகின்றனர். 

இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இந்த கொடூரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளன. 

எனவே, சனல் -4 வெளியிட்ட காணொலியை போலி எனக் கூறி சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க முடியாது. 

இது சனல்- 4 விவகாரமல்ல, இசைப்பிரியா படுகொலை விவகாரம் என்பதை சிறிலங்கா அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும். 

இதுதொடர்பாக, நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.  இது சிறிலங்கா அரசின் கடமை. 

இதை தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை சிறிலங்கா அரசு சந்தித்தே தீரும். 

நாட்டில் மனித உரிமைகள், சட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. 

இது உண்மையானால் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பாக, விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். 

சிறிலங்கா அரசு இதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறது? 

இந்தப் படுகொலை தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் பார்வை சிறிலங்காவின் பக்கம் திரும்பியுள்ளது. 

எனவே, இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். 

இதிலிருந்து அரசு தப்பவே முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire