samedi 23 novembre 2013

நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு, மும்பைக்கு இரு போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன்!

ஈரானிய கடற்படையின் 28-வது படைப்பிரிவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஆசிய கடல் பகுதிக்கு வருவதற்காக கிளம்பியுள்ளது. இரு போர்க் கப்பல்களின் பாதுகாப்புடன் வந்துகொண்டிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், இந்தியாவின் மும்பை, இலங்கையின் கொழும்பு துறைமுகங்களுக்கு வரும் என ஈரானிய அரசு செய்திச்சேவை ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ஈரானிய கடற்படையின் யூனுஸ் என்ற எடை கூடிய தாரிக் ரக நீர்மூழ்கிக் கப்பல் (ultra-heavy Tareq-class submarine) எதற்காக ஆசியாவரை வருகிறது என்பதற்கு சரியான விளக்கம் சொல்லப்படவில்லை.
ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சிக்கு தகவல் தெரிவித்த ஈரானிய கடற்படையின் லெப்டினென்ட் கமாண்டர் அட்மிரல் சியாவாஷ் ஜரே, ஆசியா செல்லும் நீர்மூழ்கிக் கப்பலின் பாதுகாப்புக்காக அல்போர்ஸ், பந்தர் அப்பாஸ் ஆகிய இரு போர்க்கப்பல்களும் செல்கின்றன என குறிப்பிட்டார்.
ஈரானிய கடற்படை குறிப்புகளில் இருந்து, அல்போர்ஸ் கப்பல், நாசகாரி ரக (destroyer) போர்க்கப்பல். பந்தர் அப்பாஸ், ஹெலிகாப்டர் தாங்கி போர்க்கப்பல் (helicopter-carrier warship).
இந்த மூன்று கப்பல்களும் இரு தினங்களுக்கு முன் (புதன்கிழமை) பெயர் குறிப்பிடப்படாத ஈரானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது.
பொதுவாக போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பப்படுவதே வழக்கம். இங்கு தலைகீழாக, நீர்மூழ்கி கப்பலுக்கு பாதுகாப்பாக போர்க்கப்பல்கள் இரண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் முறுகல் நிலையில் உள்ள ஈரான், தமது முக்கிய கப்பல்களை எதற்காக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் அனுப்புகின்றன என்பது புரியவில்லை. ஈரானிய கடற்படையின் அதிமுக்கிய பயணம் (“crucially important extraterritorial mission of the Iranian Navy”) என்கிறார், அட்மிரல் சியாவாஷ் ஜரே.
‘அதிமுக்கிய’ விஷயம் என்னவென்று அமெரிக்காவிடம்தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது!

Aucun commentaire:

Enregistrer un commentaire