dimanche 6 juillet 2014

இந்தியா திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிட பணியாளர்கள் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குடோனின் சுற்றுச்சுவருக்கு அருகே குடிசை அமைத்து தங்கி வந்துள்ளனர். இப்பகுதியில் நேற்று பெய்த மழையால் சுற்றுச்சுவர் இடிந்து, குடிசை மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் 11 பேர் பலியாகி உள்ளனர். 
இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உள்ளிட்ட 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் குழந்தைகள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 
நேற்று பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சுவர் தரம் குறைந்து, வலுவிழந்து இருந்ததே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியான துயர சம்பவத்தின் வலி குறைவதற்குள், இன்று திருவள்ளூரில் சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் வீரரராகவன் இன்று காலையில் ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் கூறியுள்ளார். இந்த விபத்து குறித்து ஆராய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire