mardi 15 juillet 2014

ஆட்கடத்தல்: "ஆதாரம் இருந்தால் கருணா.டக்ளஸ்.பிள்ளையான் மீதும் விசாரணைகள் நடத்தப்படும்

காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), முன்னாள்கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக ஆட்கடத்தல் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் அது குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, அவர்கள் உறுதியான சாட்சியங்கள் இருந்தால், அவை குறித்து நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டார். கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 19 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 750 முறைப்பாடுகளே விசாரிக்கப்பட்டிருப்பதாக ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது. இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைவாக பதவியில் இருக்கின்ற அரசாங்க செல்வாக்குள்ளவர்களுக்கு எதிரான விசாரணைகள் நீதியான முறையில் நடைபெறும் என்பது சந்தேகமே என்று இந்த விசாரணைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட
மனித உரிமைகள் சட்டத்தரணி இராஜகுலேந்திரா தெரிவித்தார். 
சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக அமைச்சர் மேவின் சில்வாவுக்கு எதிராக முறையிடப்பட்டிருந்தது. அதே உத்தியோகத்தர் பின்னர், தன்னைத்தானே கட்டிவைத்து அடித்துக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 
இதுபோன்று அரசாங்க செல்வாக்குள்ளவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் நடைபெற்றிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என்று கூற முடியாது என்றார் சட்டத்தரணி இராஜகுலேந்திரா. உண்மையிலேயே ஜெனிவாவில் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை முறியடிக்கும் நோக்கத்துடனேயே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.bbc

Aucun commentaire:

Enregistrer un commentaire