samedi 26 juillet 2014

இலங்கை வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு ஜூலையை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்ற முடிந்துள்ளது : ஜனாதிபதி

நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு ஜூலையை எம்மால் வெள்ளை ஜூலையாக மாற்ற முடிந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வேலை நிறுத்தப் போராட்டமும் மனித உயிர்கள் பலியாவதற்கும் அன்று காரணமான ஜூலை மாதத்தில் நம் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி கறுப்பு ஜூலையை வெள்ளை ஜூலையாக மாற்றியுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நல்லதையே பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தின் மற்றொரு அம்சமாகவே போஷாக்குள்ள உணவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் தேசிய திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளோம். எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபுரம் திறப்பனை பிரதேசத்தில் மஹாநாம மஹா வித்தியாலயத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழாவும் போஷாக்கும் ஆரோக்கிய வாழ்வும் சுகாதார கண்காட்சியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் பந்துல குணவர்தன. துமிந்த திசாநாயக்க, திஸ்ஸ கரலியத்த. எஸ். எம். சந்ரசேன, மாகாண முதல்வர் எஸ். எம். ரஞ்சித். பிரதியமைச்சர் வீரக்குமார திசாநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் உரையாற்றுகையில்,
மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப கூடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து போஷாக்கும் ஆரோக்கிய வாழ்வும் தேசிய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டில் பொதுவாக ஜுலை மாதம் ஒரு இருண்ட மாதமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஜுலை என கூறினாலே எமக்கு ஜுலை 7 ஆம் திகதியே நினைவுக்கு வரும். கறுப்பு ஜுலை என வர்ணிக்கப்படும் இம் மாதத்திலேயே ஜுலை வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது. அதன் பாதிப்புக்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை.
இந்த சம்பவங்களில் அன்று ஆயிரக்கணக்கானவர்கள் தொழில்களை இழந்து உயிர்களை இழந்துமுள்ளனர். அப்படியான ஒரு இருளான மாதமே ஜுலை.
நாம் அத்தகைய கறுப்பு ஜுலையை ஒளி மிகுந்த மாதமாக மாற்றியுள்ளோம். எமது எதிர்கால பரம்பரையான பிள்ளைகளுக்கு சக்திமிக்க போஷாக்கு உணவுகளை வழங்கும் செயற்திட்டத்தை நாம் ஆரம்பித்து ஆரோக்கியமானவர்களாக அவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கத் தவறுவோமானால் அது நாட்டு மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகிவிடும்.
தமது பிள்ளைகளை போஷாக்குள்ள ஆரோக்கியமான பிள்ளைகளாக வளர்த்தெடுப்பது பெற்றோரின் பொறுப்பாகும். எனினும் நாம் சற்று வித்தியாசமாக இதனை நோக்கியுள்ளோம். பெற்றோர் ஆசியர்களுக்கு உள்ள பொறுப்பிற்கு மேலாக அரசாங்கமும் இளைய தலைமுறையை சக்திமிக்கவர்களாக உருவாக்குவதில் பங்களிபுச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம்.
இதனால்தான் உலக உணவுத் திட்டத்தின் வழிகாட்டலுடன் இத்தகைய போஷாக்குத் திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். இது இன்று நாம் நாடு முழுவதிலும் நடைமுறைப் படுத்தவுள்ள தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாகும். இதனை ஜுலை மாதத்தில் மேற்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
பிள்ளைகள் ‘சொக்கலட்’ போன்ற உணவில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். அதனால்தான் நாம் பால், முட்டை, கஞ்சி என சத்துணவை அறிமுகப்படுத்துகின்றோம். கஞ்சி வழங்கும் திட்டம் கொழும்பு ரோயல் கல்லூரியிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் விரைவில் இது பிரசித்தமானது.
பிள்ளைகளை புத்தகப் பூச்சிகளாக வளர்க்காமல் அவர்களின் நேரத்தை விளையாட்டு உடற்பயிற்சி உள்ளிட்ட விடயங்களிலும் செலவிட ஊக்கு விப்பது அவசியம். எமது முன்னோர்கள் சிறந்த பாரம்பரிய உணவை உட்கொண்டதால்தான் பாரிய குளங்கள். கட்டடங்களை அவர்களால் நேர்த்தியாக நிர்மாணிக்க முடிந்துள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு ஆரோக்கியமான உணவை எமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போஷனை தெனும தினும போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கான சிறப்பு விருதினை விழா மேடையில் ஜனாதிபதி கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire