mardi 29 juillet 2014

இலங்கையில் அரசியள் திருடர்கள் ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள்

போராடிய பொடியள் போய்ச் சேர்ந்த பிறகு இப்போது திருடர்கள் ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள்.உள்ளுரில் நாளாந்தம் வன்முறைகள், பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் கும்பல்கள் பற்றி பேசவரவில்லை. அதனை இன்னொரு சந்தர்பத்தில் பார்ப்போம்.சமூகத்தை மக்களை ஏமாற்றி உசுப்பேத்தி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்மென்ற விருப்பமும் கிடையாது. தீர்வுக்கான சாத்தியங்கள் உருவானால் அதனை சீர்குலைத்துவிட வேண்டுமென்ற கரிசனையுடன் இவர்கள் செயற்படுகின்றார்கள்.கடந்த 30 வருடங்களில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டதில் முதுகெலும்பு இல்லாத இந்த பிழைப்புவாதக் கூட்டமும் ஒரு காரணமாக இருந்தது.தமிழர்களுக்கு பொறுப்புள்ள தன்நலமில்லாத தலைவர்கள் இருந்திருந்தால் இன்றளவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் பெருமளவுக்கு அவ்வாறு இருக்கவில்லை.அல்லது ஆளுமைமிக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.அல்லது துரோகிகள் என்ற முத்திரையுடன் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள்.இன்றளவும் ஆக்கபூர்வமாக செயற்பட முனைபவர்கள் விரும்பத்தகாதவர்களாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதற்கு சமூகமும் ஒரு முக்கிய காரணி. இந்தச் சமூகமும் துரதிஷ்டவசமாக இந்தப் போக்கிரிகளைத்தான் தமது தலைவர்களாக தேர்ந்தெடுக்கிறது.பிரச்சினை நீடித்து நிலவினால்தான் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் அங்கு இருப்பவர்களின் விசா வதிவிட உரிமைகளை உறுதி செய்ய முடியும் என இச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்ற ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.சொந்த ஊரில் வாழ்வின் இருப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது.இங்கு வாழ்வு சீர்குலைந்து போவதே ஐரோப்பாவில் தமது சந்ததிகளுக்கு வாழ்க்கையை உருவாக்குமென இதன் ஆழ்மனம் கருதுகிறது.எனவே பிரச்சினை தீர்வென்பது இதற்கு கசப்பான விடயம்.ஆனால் மிகவும் வறிய மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை தலைவிதி இங்குதான்.ஆனால் இவர்களும் இந்த சீர்குலைவு கருத்தியலின் செல்வாக்குக்கு உட்படுகிறார்கள்.ஆட்சியாளர்களும் அவர்களது பரிவாரங்களும் கூட இனப்பிரச்சனை நீடித்து நிலவுவதையே விரும்புகிறார்கள்.அவர்களின் வாக்குவங்கி அரசியல் இருப்பு எல்லாமே பேரினவாத அரசியல் சார்ந்தது.எனவே நாட்டில் பிரிவினை பேசும் அரசியல் எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதாவது அனுகூல சத்துருக்கள் தேவைப்படுகிறார்கள்.அதற்கு இந்த சீர்குலைவு சக்திகள் சமூகப் பிரிவினர் உதவுகிறார்கள். அதுதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இந்தச் சக்திகளுக்கு ஜனநாயகம், மனித உரிமை, சமூக பொருளாதார அபிவிருத்தி, முன்னேற்றம் இவை பற்றிய எந்த அக்கறையும் கிடையாது.எனவே ஆக்கத்திற்கான இயக்கங்கள் தேவைப்படுகின்றன.அது இனங்களின் உரிமைகளையும், சாமானிய மனிதர்களின் சமூக பொருளதார உரிமைகளையும், ஜனநாயக மனித உரிமைகளையும் முன்னெடுத்துச் செல்வதாக அமைய வேண்டும்.இராணுவவாதம், நில ஆக்கிரமிப்பு, கலாச்சார ஆக்கிரமிப்பு பாரியளவில் நிகழ்கிறது.தமிழ் தேசியம் தன்னுள் இருக்கும் மேட்டுக்குடித்தனம், சாதீயம் ,பிராந்தியவாதம் பற்றி கேள்வி கேட்கத் தயாராக இல்லை.அது சமூகத்தில் வறியவர்களின் 
sritharan (suku)
நிலைபற்றி பேசுவதில்லை.இந்த இருபக்கத்து அரசியல் சித்து விளையாட்டுக்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான சக்திகள் சமுதாயத்தில் உருவாக வேண்டும்.முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மக்கள் சுயாதீனமாக இயக்கங்கள் நடத்துவதற்கான இடைவெளிகள் இங்கில்லை.அது வெலவேரியாவிலும், கட்டுநாயக்காவிலும் சிலாபத்திலும், பல்கலைகழக மாணவர்களின் போராட்டங்களிலும்,வடக்கு வலிகாமம். மற்றும் முல்லைத்தீவு மக்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மக்கள் கூடி நின்று தமது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும்.1953 ஹர்த்தால் அரிசி விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி நடத்திய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்.அதேபோல்  1960 களின் முற்பகுதியில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டம் முக்கியமானது.டெல்லியில் ஜந்தர் மந்தர், எகிப்தின் தஹீரின் சதுக்கம், அமெரிக்காவின் வோல் ஸ்ரீட், பிரிட்டனின் ரபல்கார் சதுக்கம் பிரான்சின் சுதந்திர சதுக்கம் இவ்வாறு மக்கள் கூடி போராட்டங்களை நடத்தும் இடங்கள் இருக்கின்றன.மக்களின் கோரிக்கைகள் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான இடைவெளிகள் வேண்டும்.இலங்கையில் ஜனநாயகம் என்பது மிகவும் கேலிக்குரியது.பேரினவாத மதவாத, சக்திகள் கோஷம் எழுப்ப அனுமதிப்பார்கள். தொழிலாளர்கள், மாணவர்கள் சிறுபான்மை சமூகங்கள் தமது கோரிக்கைகளை எழுப்பும் போது இரும்பு கரம் கொண்டு அடக்குவார்கள்இலங்கைக்கு பெருமைமிகு தொழிலாளர் வெகுஜன இயக்க போராட்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு மீட்கப்பட வேண்டும்.மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக வீதிக்கு வருவதற்கான நிலைமைகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஊடகம்இந்தியாவில் இது நான்காவது தூண் எனப்படுகிறது.இந்திய மக்களை பாதிக்கும் பல விடயங்கள் இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. விவாதம் செய்யப்படுகின்றன. நலிவுற்ற சமூகப் பிரிவினர் மீதான பாலியல் வன்கொடுமைகள், பால் சமத்துவம், தலித்துக்கள் ஆதிவாசிகள் மீதான ஒடுக்கு முறைகள், மதச்சார்பின்மை;, மூன்றாம் பால் இனத்தாரின் உரிமைகள்.  உச்சபட்ச தண்டனை வழங்குவது, பெருவாரியான மக்களுக்கு  சுகாதாரம் கல்வி கிட்டுவதற்கான வழிவகைகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.ஆனால் இலங்கையில் இதற்கான இடைவெளி அரிதிலும் அரிது. இராணுவவாத சிந்தனை, சமூகத்தை கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருக்கும் சிந்தனை போக்கு அதிகரித்து வருகிறது.மத மோதல்கள் உட்பட அத்தனை காரியங்களும் நிகழ்கின்றன. எனவே ஜனநாயகத்துக்கான சீர்திருத்தங்கள் அதிகார மட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.ஊடக சுதந்திரம் உண்மையான அர்த்தத்தில் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் ஊடகங்கள் பெருமாலும் ஊடகமுதலாளிகள் அதிகாரவர்க்க சக்திகளின் நலன்களை முன்னிறுத்திN;ய செயற்படுகின்றன.ஆனால் அதை அம்பலப்படுத்தும் ஊடகங்களும் இருக்கவே செய்கின்றன. பல விடயங்களை கேள்விக்குள்ளாக்கும் கிழித்துப்போடும் ஊடகங்கள் இருக்கின்றன. எந்த தன்னலமும் இல்லாத ஊடகவியலாளர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  முன்னாள் திருடர்களும் ஊடகவியலாளர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் சொல்வதை நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. எமது மக்கள் இதிலிருந்து விடுபடுவதற்கு உப கண்ட அளவில், உலகளவில் ஊடகங்களை அவதானிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஈடுபாடு செலுத்த வேண்டும்.அப்போதுதான் உலகம் எவ்வாறு நாம் எவ்வாறு என்பது புரியும். இலங்கையின் அதிகார மட்ட சீர்திருத்தம் சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதிலிருந்து அவசரகால- பயங்கரவாதத் தடைச்சட்டங்களை நீக்குவதிலிருந்துதான் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.விடயங்கள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.இதற்கு இனபேதம் கடந்து சமூக அரசியல் சக்திகள் செயற்பட முன்வர வேண்டும்.         ...சுகு-ஸ்ரீதரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire