vendredi 4 juillet 2014

பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து சமூகத்தவர்களக்கு எதிராக வன்முறை மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

இன,மத வன்முறைகளைத் தடுக்குமாறு இலங்கையிடம் மூன்று நிபுணர்கள் கோரிக்கை!கடும்போக்கு பௌத்த குழுக்களால் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து சமூகத்தவர்களக்கு எதிராக வன்முறை மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையின் மூன்று சிறப்புப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நாவின் மதச் சுதந்திரத்துக்கான சிறப்புப் பிரதிநிதி ஹெய்னர் பிலேபெல்ட், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதி ரிட்டா இசக், நீதிக்குப் புறம்பான மரணதண்டனை தொடர்பான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் ஆகியோர் இணைந்து இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கையின் தென் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து, ஐ.நா. தரப்பில் இருந்து, இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான செய்தியாக இது அமைந்துள்ளது. இவர்கள் மூவரதும் கருத்துக்களை உள்ளடக்கி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்- கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 350 தாக்குதல்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 150 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவங்களில் குற்றம் இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த இலங்கை அரசு சடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த மாதம் 15ஆம் திகதி கடும்போக்கு சிங்கள தேசியவாதக் குழுவான பொது பல சேனா, அளுத்கமவில் மிகப் பெரிய பேரணியை நடத்தியதன் காரணமாக, இனக்கலவரங்கள் நடந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 80 பேருக்கும் மேல் காயமடைந்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் சில இடங்களில் பள்ளிவாசல்களும் சூறையாடப்பட்டன. குற்றம் செய்து விட்டுத் தப்பிவிடலாம் என்ற சூழலே இலங்கையில் வன்முறையைத் தூண்டுகிறது. பொது பல சேனா தவிர சிங்கள ராவய, ஹெல பொது பொவுர ஆகிய குழுக்களும் இலங்கையில் கடும்போக்குப் பார்வையைக் கொண்டிருக்கின்றன. சிறுபான்மை மதத்தவரால் புத்தர் சிலைகள் தகர்க்கப்படுகின்றன எனவும் கிறிஸ்தவர்கள் இளைஞர்களையும் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து வருகின்றனர் எனவும் இந்தக் குழுக்கள் உள்ளூர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல, சிங்கள மக்களை அழிப்பதற்காகவும் சந்ததிகள் வளர்வதைத் தடுப்பதற்காகவும் போதைப் பொருட்களையும் கருத்தடுப்பு மாத்திரைகளையும் முஸ்லிம்கள் கடத்தி வருகின்றனர் எனவும் இக்குழுக்கள் கூறிவருகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான கருத்துக்கள், இலங்கையில் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள பௌத்தர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சிறுபான்மையினர் மீது விரோத உணர்ச்சியையும் வளர்க்கின்றன என ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.- என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire