dimanche 20 juillet 2014

இணையத்தில் சிறார் துஷ்பிரயோகம் செய்வோர் கைது

இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் இணையதளங்கள் ஊடாக அணுகும் நபர்களை கண்காணித்து கைதுசெய்யும் (cyberwatch அலகு) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சிறார் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திவருகின்றது. 
இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
இப்படியான சுமார் 2500 பேரின் இணையதள செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துவருவதாக இலங்கையின் சிறார் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பிபிசியிடம் கூறினார். 

'பேஸ்புக் போன்ற இணையதளங்கள் ஊடாக சிறார்களை அணுகி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயல்வோர் தொடர்பில் ஆராய்ந்துபார்த்து இந்த சைபர்வா்ட்ச் யுனிட் மூலம் கைதுசெய்துவருகின்றோம்' என்றார் அனோமா திஸாநாயக்க. 
'இன்னும் 30 பேருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றோம். இன்னும் 2500 பேர் வரையில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள். சமூகத்தில் ஒவ்வொரு அஸ்தஸ்துகளில் இருப்பவர்கள். சிறார்களை துஷ்பிரயோகம் செய்வதற்காக அவர்களை தூண்டுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர் 'என்றும் கூறினார் திஸாநாயக்க. 
தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் பல்கலைக்கழக பேராசிரியர், விளையாட்டு பயிற்சியாளர், நில அளவைவியல் திணைக்கள அதிகாரி மற்றும் கணினி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என சமூகத்தின் பலதரப்பட்ட அந்தஸ்துகளில் உள்ளவர்களும் இருப்பதாக சிறார் பாதுகாப்பு அதிகாரசபை கூறுகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire