mercredi 28 mars 2012

பீரிஸ் – ஹிலாரி சந்திப்பு: மே 18ம் நாள் நடக்கும்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு மே 18ம் நாள் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் கலந்துரையாடுவதற்கு இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எதிர்பார்த்துள்ளார்.“ என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுப்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட், “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்குத் தேவையான உறுதியான நடவடிக்கையை சிறிலங்கா எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. சிறிலங்காவை இந்தத் தீர்மானத்தின் மூலம் முன்னோக்கி நகர்த்த முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. உங்களுக்கும் தெரியும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் சிறிலங்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது. சிறிலங்காவை முன்னோக்கி நகர்த்த முடியும் என்று நாம் நம்புகிறோம். உங்களுக்குத் தெரியும், இன்றைய நாள் வரை அவர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்குத் தேவையான எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire