jeudi 1 mars 2012

உலக அளவில், ஏழைக் குழந்தைகளின் நிலை, கிராமங்களை விட நகரங்களில் இன்னும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா. மன்றத்தின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது

நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளின நிலை தொடர்பாக யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் பொருளாதார ரீதியாக பலமான நிலையில் உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவை, ஏழைக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் போதிய அளவு இல்லாததால், ஏழைக் குழந்தைகளுக்கு அதிக அளவு நோய் பாதிப்பு, போஷாக்கின்மை காரணங்களால் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக யுனிசெஃப் ஆய்வு கூறுகிறது. பல நாடுகளில், நகர்ப்புற ஏழைக் குழந்தைகளுக்கு உயரத்துக்கு ஏற்ற எடை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம், கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் நிலையை விட மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் எத்தகைய சமூக, பொருளாதார சூழ்நிலையில் பிறந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதைப் பொருத்தே அவர்களுக்கான சுகாதார வசதிகளும் நிர்ணயிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்கீகாரமற்ற குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது பலமடங்கு பிரச்சினையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனெனில், அடிப்படை சுகாதாரமற்ற அந்தக் குடியிருப்புக்களில் இருந்து ஏராளமான நோய்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. நகரங்களில் வாழும் மூன்றில் ஒரு பகுதியினர், கிராமங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். மேலும், மூன்றில் ஒரு குடிசை, ரயில் பாதைகளை ஒட்டியோ அல்லது ஆற்றின் கரையை ஒட்டிய ரயில் பாதைகளை ஒட்டியோ அமைந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 377 மில்லியன் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதாகவும், 2026-ம் ஆண்டில் இது 535 மில்லியனாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், சுமார் 50 ஆயிரம் குடிசைப் பகுதிகள் உள்ள நிலையில், அதில் 70 சதவீதம் தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்கலில் மட்டும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளின் நிலையை மேம்படுத்த, சுகாதாரத் திட்டங்களில் முதலீடு செய்வது, ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் முன்னேற்றகரமான வரிவிதிப்பு முறைகளைக் கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். ஏழைகள், பெண்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் சமமான அளவில் அரசு வளங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல பரிந்துரைகளை யுனிசெஃப் அளித்திருக்கிறது

Aucun commentaire:

Enregistrer un commentaire